திருப்பூர்,
அரசு நகர மற்றும் புறநகரப் பேருந்துகள் உள்பட அனைத்துப் பேருந்துகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கைகள் என்பதை தனியாக குறிப்பிடுவதுடன், ஒதுக்கப்படும் இருக்கைகளில் அவர்கள் அமர்வதை பேருந்து நடத்துநர்கள் உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரியுள்ளது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஊத்துக்குளி தாலுக்கா பேரவை கூட்டம் ஞாயிறன்று ஊத்துக்குளி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பேரவைக் கூட்டத்திற்கு பி.எம்.வேலுமணி தலைமை தாங்கினார். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், ஓய்வூதியர் சங்க நிர்வாகி சின்னச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.ஜெயபால் சங்கத்தின் நோக்கத்தையும், செயல்பாடுகளையும் விளக்கிச் சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக பி.எம்.வேலுமணி, செயலாளராக மேகநாதன், பொருளாளராக கோபாலசாமி, துணைத்தலைவராக பெரியசாமி, துணைசெயலாளராக கோவிந்தராஜ் உட்பட 9 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டனர். சிபிஎம் தாலுகா செயலாளர் சிவசாமி, சிஐடியு பனியன் சங்க ஏரியா செயலாளர் வி.கே.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை எழுதப்படுவதில்லை. அதை கட்டாயம் எழுத வேண்டும். மாற்றுத் திறனாளிகள் இருக்கைகளில் அவர்கள் அமர்வதற்கு நடத்துநர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்கத் துணைத் தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.