மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளிடையே நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்கவும் அதன் பயன்களை விளக்கும் வகையிலும் கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து கோவில் நாட்டு மாடுகளின் கண்காட்சியை நடத்தியது பொது மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மூடுதுறை கிராமத்தில் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷே விழா ஞாயிறன்று நடைபெற்றது. கோவில் விழாவில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பத்தாயிரதிற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இப்பகுதி இளைஞர்கள் கோவிலின் வளாகம் அருகிலேயே நாட்டு மாடு கண்காட்சியினை நடத்தினர். நமது விவசாயத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக “நமது ஜூ” என்ற பெயரில் நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் உழவுக்கு பயன்படுத்தப்படும் காளைகள், பால் கறவை நாட்டு மாடுகள், குட்டை ரக காளைகள், காங்கேயம் காளைகள் என 18 வகையான நாட்டு மாடுகளை வைத்திருந்ததோடு, உள்நாட்டு நாட்டு குதிரை வகைகளையும் வைத்திருந்தனர்.

கோவில் விழாவிற்கு வந்திருந்த மக்கள் இதனை மிகுந்த ஆர்வதுடன் கண்டு ரசித்ததோடு அதன் தன்மைகளையும் கேட்டறிந்தனர். கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் முக்கிய உப தொழிலாக இருக்கும் நிலையில், பலரும் தற்போது பல்வேறு காரணங்களினால் இதனை கைவிட்டு வருகின்றனர், அல்லது நாட்டு மாட்டு ரகங்களை விட்டு விட்டு நமது மண்ணுக்கு பொருத்தமில்லாத ஜெர்சி ரக வெளிநாட்டு மாடுகளை வளர்க்கின்றனர், இதனை மாற்றி மீண்டும் நமது விவசாயத்தை பாரம்பரிய முறைக்கு மாற்றவும், இயற்கை உரங்களை அள்ளித்தரும் நாட்டு மாட்டு வளர்ப்பை அவர்களிடையே ஊகுவிக்கவுமே இக்கண்காட்சி நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்களின் இம்முயற்சி பெரிதும் பலனளிப்பதால் இதுபோன்று கிராம விழாக்களில் தொடர்ந்து இந்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்படும் என்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: