திருப்பூர்,
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் இருந்த இடத்தில் இந்து முன்னணியினர் அராஜகமாக கொடி ஏற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோல்டன் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்க கொடிக்கம்பங்கள் இருந்தன. கடந்த இரு தினங்களுக்கு முன்னால் அவற்றை ரகசியமாக இந்து முன்னணி சமூகவிரோதிகள் திருடிச் சென்றுள்ளனர். ஞாயிறன்று திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் கொடியேற்று விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் மேற்படி கோல்டன் நகரில் இந்து முன்னணி குண்டர்கள் திருடிச் சென்ற இடதுசாரிகளின் கொடிக் கம்பத்திலேயே காவி வண்ணம் பூசி அதே இடத்தில் நட்டு வைத்தனர்.

இந்த விஷமத்தனமான அட்டூழியம் பற்றி தகவலறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காலை 9 மணியளவில் காவல் துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் அண்ணாதுரை கோல்டன் நகரில் அந்த இடத்தில் இந்து முன்னணி கொடி ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்றனர். அத்துடன் அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் காலை 11 மணியள்வில் கொடியேற்றுவதற்காக வந்து இந்து முன்னணியினர் அந்த இடத்தில் காவல் துறை முன்னிலையில் தகராறு செய்து அராஜகம் செய்ததுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் பாண்டியை தாக்கினர். வடக்கு காவல் ஆய்வாளர் பிச்சையாவை தள்ளிவிட்டு தகராறு செய்து கொடியேற்றினர். எனினும் இந்த அராஜக அட்டூழியத்தைத் தடுப்பதற்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது பற்றி அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோல்டன் நகர் பகுதியில் திரண்டனர். காவல் துறை முன்னிலையிலேயே அராஜக, அட்டூழியம் நிகழ்த்திய இந்து முன்னணி காலிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி கொடிமரம் இருந்த இடத்தில் அதை அகற்றிவிட்டு இந்து முன்னணி கொடிமரம் அமைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் ஜனநாயக நடைமுறையை மதிக்காமல் அராஜகமான முறையில் செயல்படும் காவிக் கூட்டத்தைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளைத் திரட்டி இயக்கம் நடத்தவும் இடதுசாரி கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துவருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.