நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் கொண்டு செல்வதே மிகப்பெரிய சவாலாகும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார். ‘வளர்ச்சியின் நாயகன்’ என்ற பிம்பத்தை உருவாக்கி ஆட்சியை பிடித்த நரேந்திரமோடி, தொடர்ந்து வளர்ச்சி வளர்ச்சி என்று வாய் வலிக்காமல் பேசி வருகிறார். ஆனால் அவர் கூறும் வளர்ச்சி ஏழை எளிய பெரும்பான்மை இந்திய மக்களுக்கானது அல்ல, மாறாக ஒரு சில பெருமுதலாளிகளுக்கே என்பதை அவரது ஆட்சியின் செயல்பாடுகள் நிரூபித்து வருகின்றன.

புதிய இந்தியா எனும் இலக்கை 2020 ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என்று கூறியுள்ள அவர், ஜன் தன் யோஜனா, ஸ்டண்டப் இந்தியா போன்ற திட்டங்கள் பெருமளவுக்கு நிதி உள்ளீடுகளை கொண்டு வரும் என்று கூறியுள்ளார். கூட்டாட்சி தத்துவத்தின் பெருமையை பேசியுள்ள அவர், கடந்த ஆண்டு வரை மாநிலங்களுக்கு 6 லட்சம் கோடி வழங்கப்பட்டதாகவும், தற்போது 11 லட்சம் கோடி தரப்படுகிறது என்றும் கூறியுள்ளார். உண்மையில் கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது. மாநில அரசுகள் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டு அனைத்துக்கும் மத்திய அரசை எதிர்பார்த்து கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மோடி அரசின் ஆதரவுடன் அடாவடி செய்துவரும் தில்லி துணைநிலை ஆளுநரின் அத்து மீறல்களை கண்டித்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிதி ஆயோக் கூட்டம் நடக்கும் நாளில் கூட போராடி வருகிறார். அவரை சந்தித்து ஆதரவு தெரிவிக்கக் கூட பல்வேறு மாநில முதல்வர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மறுபுறத்தில் ஜிஎஸ்டி வரி என்ற பெயரால் மாநிலங்களின் வரிவருவாய் மத்திய அரசினால் முற்றாக உறிஞ்சப்படுகிறது. வரி சலுகைகள் அளிக்கும் உரிமை மாநில அரசுகளிடமிருந்து கிட்டத்தட்ட பறிக்கப்பட்டு விட்டது. மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு நிதி ஆயோக் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டதே கூட மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி நடைமுறைக்கும் எதிரான ஒன்றுதான். பல்வேறு திட்டங்களை மோடி பகட்டாக அறிவித்து வருகிறார். ஆனால் அதனால் மக்களுக்கு பலன் ஒன்றும் இல்லை என்பதும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதும் நடைமுறை அனுபவமாக உள்ளது. ஆனால் இந்த திட்டங்களையெல்லாம் மோடி பட்டியலிட்டு மிகப் பெரிய மாற்றம் வரப் போவதாக வழக்கமான பல்லவியை பாடியுள்ளார்.

நிதி ஆயோக் உருவாக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் பெரும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒவ்வொரு முறையும் பொதுக் கூட்டம் போல மோடி பேசுவதே கண்ட பலனாக உள்ளது. மோடி கூறும் வளர்ச்சி வெறும் மாயத் தோற்றம். நாட்டின் பெரும் பகுதி மக்கள் துன்ப துயரத்தில் உழல்வதை கருத்தில் கொள்ளாத பிரதமரின் வார்த்தைகளில் சத்தும் இல்லை. சாரமும் இல்லை. மாநிலங்கள் ஒன்றி ணைந்து வலுவாக போராட வேண்டிய நேரம் இது.

Leave a Reply

You must be logged in to post a comment.