கோவை,
நீதிமன்ற உத்தரவின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் அதே நீதிமன்ற உத்தரவை பெற்று மீண்டும் திறந்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புலியகுளம், பங்கஜமில் சாலை, விநாயகர் கோவில், கனேசபுரம் ஆகிய குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் மதுக்கடையை மூடவேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்தொடர்ச்சியாக குடியிருப்பு பகுதிகளின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 2017 ஜூன் மாதம் 110 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தற்போது மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் 48 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதில் புலியகுளம் விநாயகர் கோயில் அருகில், கனேசபுரம் ஆகிய கடைகளும் அடங்கும். இதன்காரணமாக தினமும் இந்த கடைகளில் அதிக அளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிக அளவில் சண்டை, சச்சரவுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனஅப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை ஏற்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.