கோவை – பொள்ளாச்சி சாலையில் அதிக நெருக்கடி உள்ள பகுதியாக ஆத்துப்பாலம், கரும்புக்கடை, உக்கடம் ஆகிய பகுதிகள் இருந்து வருகிறது. பழனி, உடுமலை, பொள்ளாச்சி ஆகிய வழித்தடத்தில் இருந்து கோவைக்கு வருகிற வாகனங்களும், கேரள மாநிலத்தில் இருந்து வருகிற வாகனங்களும் கோவை நகரத்திற்குள் நுழைய இந்த சாலை பிரதானமான சாலையாக உள்ளது. ஆகவே எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக இது காணப்படுகிறது. சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள இப்பகுதியில் போக்குவரத்தை எளிமைப்படுத்த ரூ.215.51கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். தற்போது மண் பரிசோதனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒப்பணக்கார வீதியில் இருந்து ஆரம்பித்து உக்கடம், கரும்புக்கடை வழியாக ஆத்துப்பாலத்தில் இந்த பாலம் முடிவடையும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. இதன்பிறகு உக்கடத்தில் தொடங்கி ஆத்துப்பாலத்தில் முடியும் வகையில் திட்டம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது நெடுஞ்சாலைத்துறை வரைபடத்தின்படி ஒப்பணக்கார வீதியில் தொடங்கி கரும்புக்கடை வளைவு வரை 1.97 கி.மீட்டருக்கு இந்த பாலம் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான குடியிருப்புகள் உள்ள கரும்புக்கடை பகுதியில் சாலையை கடக்க அப்பகுதியினர் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதால் அதிக போக்குவரத்து நெருக்கடியான பகுதியாக கரும்புக்கடை இருப்பதால், இதைக் கடக்கவே பாலம் வேண்டுமென அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன்காரணமாக ஆத்துப்பாலம் சந்திப்பு வரை இந்த பாலம் அமையும் என கூறியவர்கள், தற்போது டோல்கேட் இருப்பதால் கரும்புக்கடை வரை மட்டுமே பாலம் கட்டப்படும் என கூறுவது சமூக ஆர்வலர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.

பாலம் கரும்புக்கடையோடு முடிகிறது என திட்ட வரைபடம் கூறுகிறது. ஆனால் ஆத்துப்பாலம் வரை நீளும் என அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூறுகின்றனர். எது உண்மையென அறிவிக்க வேண்டும் என்கின்றனர் கரும்புக்கடையைச் சேர்ந்த மக்கள். மேலும், உக்கடம் மேம்பாலத்தின் திட்டம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்த மக்கள் தற்போது வெளிப்படையாக பேசவும், போராட்டத்திற்கும் ஆயத்தமாகி வருவதால் ஆட்சியாளர்கள் தற்போது கையை பிசைந்து வருகின்றனர். பாலத்தின் இறுதி வடிவமைப்பை வெளியிட வேண்டும். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர். ஆனால், இதில் குழப்பம் தேவையில்லை. சுங்கச்சாவடி இருப்பதால் 2 கட்டமாக பாலம் கட்டப்பட உள்ளது. திட்டமிட்டபடி ஆத்துப்பாலம் வரை பாலம் அமையும் என்கின்றனர் அதிகாரிகள். அதாவது ஆத்துப்பாலத்தில் உள்ள சுங்கச்சாவடியின் ஒப்பந்தம் நடப்பாண்டு இறுதியில் முடிகிறது. ஒப்பந்தம் முடியும் முன்பாக ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டப்படுகிறது என திட்டத்தை வெளிப்படையாக அறிவிக்க முடியாது என்பதால், கரும்புக்கடை வரை பாலத்தை அறிவித்துள்ளதாகவும், சுங்கச்சாவடி ஒப்பந்தம் முடிந்ததும் 2ம் கட்ட திட்டமாக பாலம் ஆத்துப்பாலம் சந்திப்பு வரை நீட்டிக்கப்படும் எனவும் அதிகாரிகள் வாக்குறுதி அளிக்கின்றனர்.

இதற்கிடையே, பாலத்திட்டத்திற்கு இடையூறாக உள்ளதாக கூறப்பட்ட சுங்கச்சாவடியின் ஒப்பந்தம் தற்போது கூடுதலாக 134 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஏப்.16ம் தேதி வரை சுங்கச்சாவடி செயல்படும் எனவும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை இதேபோல் மேற்கொண்டு சுங்கச்சாவடி ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமானால், தற்போதைய வடிவமைப்பின்படி மேம்பாலம் கரும்புக்கடையோடு முடிவடையவும் வாய்ப்புள்ளது. எனவே அமைச்சர், அதிகாரிகள் சுங்கச்சாவடி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள். இவ்வாறு வரைபட திட்டம் மற்றும் அதிகாரிகளின் உறுதியளிப்பு என பல்வேறு குழப்பங்கள் இந்த மேம்பால திட்டத்தில் காணப்படுகிறது. ஏற்கனவே, கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் அறிவிக்கப்பட்டபடி அமையாததால் எவ்வித பயனும்இன்றி போனதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல், உக்கடத்தில் கட்டப்படும் பாலமும் பயனற்றதாக மாறிவிடுமோ என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனை போக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. அதனை செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

– அ.ர.பாபு

Leave a Reply

You must be logged in to post a comment.