திருப்பூர்,
திருப்பூரில் இந்து முன்னணியின் அராஜக செயலைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் ஜூன் 20 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூரில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூரில் இந்து முன்னணியினர் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மாநகர் முழுவதும் சாலைகளை மறித்தும், போக்குவரத்தை நிறுத்தியும் அவசரமாகசெல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டியும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோல்டன் நகர் பகுதியில் சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி கொடிக்கம்பத்தை இரவோடு இரவாக அகற்றி விட்டு இந்து முன்னணியின் கொடிக்கம்பத்தை நட்டு கொடியேற்றி அதனை தட்டி கேட்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை தாக்கி, தடுக்க வந்த காவலர்களையும் தள்ளி விட்டும் அராஜகத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை கண்டித்தும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் கோல்டன் நகர் பகுதியில் வரும் ஜூன் 20 ஆம் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இந்த கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் டி.கே.டி. மு.நாகராசன், மாநகர அவைத்தலைவர் க.ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன், வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி தனசேகரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அ.தமிழ்வேந்தன், மதிமுக சார்பில் மு.சம்பத், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் யாழ் ஆறுசாமி, மணிகண்டன், தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி சண்.முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.