மே 22 மற்றும் 23ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டதும், 25 பேருக்கு மேல் இடுப்புக்கு கீழே குண்டுக் காயங்கள் பட்டு சிகிச்சை பெற்று வருவதும், 50க்கும் மேற்பட்டோர் காவல்துறை இரும்புக் கம்பி, உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாலும் உடலின் பல பாகங்கள் சிதைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் போதுமானதாக இல்லை. நிர்வாகத்தின் அத்துமீறல்களும், அட்டூழியங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

மே 22 அன்றும், அதற்கு பிறகும் காவல்துறை ஊரடங்கு உத்தரவு போட்டது போல, யாரெல்லாம் கண்ணில் படுகிறார்களோ அவர்களையெல்லாம் அடித்து, துவைத்து, காயப்படுத்தி, தர தரவென்று இழுத்துச் சென்று, சட்டவிரோதக் காவலில் பல நாட்கள் அடைத்து வைத்திருந்தனர். தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்த தன்னலமற்ற கடுமையான முயற்சி மற்றும் மாவட்ட தலைமை நீதிபதியின் சட்டப்படியான ஆனால் துரிதமான நடவடிக்கைகள் காரணமாக சிறார்கள் விடுவிக்கப்பட்டனர்; சட்டவிரோத காவலில் அடைத்து வைக்கப்பட்டவர்களின் உடம்புகளில் இருந்த காயங்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

நடமாடத்துணிந்ததே…
சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டோரில் ஏறத்தாழ அனைவரும் வன்முறையிலோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திலோ ஈடுபட்டவர்கள் அல்ல. மாறாக அன்றைய தினம் தெருக்களில் நடமாட துணிந்தார்கள் என்ற காரணத்திற்காகவே சட்டவிரோத காவலையும், காயம் ஏற்படுத்தக் கூடிய சித்ரவதைகளையும், என்று முடியும் என தெரியாத வழக்குகளையும் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இது தவிர இன்று வரையிலும் காவல்துறையின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் தூத்துக்குடியில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து இறுதி ஊர்வலங்களிலும் கலந்து கொண்ட ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. பல கட்சிகளின் தலைவர்களையும் காவல்துறை மிரட்டி இருப்பதை அறிய முடியும்.

போதுமான அளவிற்கு போலீசின் அத்துமீறல்கள் வெளிப்படாத அளவிற்கே ஊடகங்களின் மீதும் அறிவிக்கப்படாத கட்டுப்பாடுகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் திணித்திருக்கின்றன. காவல்துறை, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு ஆகியவை நீண்ட நாட்களாகவே ஸ்டெர்லைட்டால் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டவர்கள் போன்றே நடந்து கொண்டனர். குமரெட்டியாபுரம் கிராம மக்கள் முதன் முதலில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அண்ணாநகர் பூங்காவில் உண்ணாவிரதம் இருந்த போது அவர்களின் கருத்துக்களைச் சொல்வதற்கு கூட அனுமதிக்கவில்லை. மாறாக, எந்த ஒலிபெருக்கியும் இல்லாமல் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்பந்தித்தனர். குழந்தைகள், பெண்கள், வயதான வர்கள் என்று யாரையும் விட்டு வைக்காமல் கைது செய்ததோடு போராட்டக்குழுவைச் சார்ந்தவர்கள் மீதும் கடுமையாக வழக்குகளை பதிவு செய்து அவர்கள் வீட்டில் தங்க முடியாத நிலைமைக்கு தள்ளினர்.

போஸ்டர் ஒட்டினால் மணிக்கட்டு உடைப்பு:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போஸ்டரை ஒட்டினார் என்பதற்காக போஸ்டர் ஒட்டுபவரின் கையின் மணிக்கட்டை உடைக்கிற அளவிற்கு முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் நிறைந்ததாக மாவட்ட காவல்துறை நடந்து கொண்டது. அவருக்கு அது தொழில். ஸ்டெர்லைட்டை மூடு என்றாலும், திற என்று போஸ்டர் கொடுத்தாலும், ஒன்றுமே செய்யாதே என்ற போஸ்டர் கொடுத்தாலும் ஒட்டக் கூடியவர் அவர். அவருக்கு போஸ்டர் ஒட்ட பணம் கொடுத்தால் அதை செய்பவர். ஆனால் இதைக் கூட உணர்ந்தறிய முடியாத மூடர் கூட்டமாக தனது விசுவாசத்தை ஸ்டெர்லைட்டுக்கு காண்பிக்க வேண்டும் என்ற நோக்கோடு அந்த தொழிலாளியின் கையை உடைத்தது மட்டுமின்றி, உடைத்ததை வெளியே சொன்னால் வெளியே வர முடியாத வழக்குகளை பதிவு செய்து சிறையில் நிரந்தரமாக தள்ளி விடுவோம் என்று வேறு மிரட்டியிருக்கிறார்கள்.

பஸ்ஸை வழிமறித்து பையனை இழுத்துச்சென்று;
இது தவிர மாணவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய போது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களையும், அந்த மாணவர்கள் அணிந்திருந்த சீருடையை யார் அணிந்திருந்தாலும் அவர்களை எல்லாம் காவல்துறை இழுத்துச் சென்று காவல் நிலையங்களில் அடைத்துக் கொண்டிருந்தது. ஜாய்சன் என்கிற இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் என்கிற காரணத்திற்காக அரசு தேர்வு எழுதச் சென்ற வரை வழியில் பஸ்சை மறித்து தரதரவென இழுத்துச்சென்று போலீஸ் காவலில் வைத்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரி விக்கின்றன. இது தவிர, இறந்தோரின் குடும்பங்கள், காயம்பட்டோர், காயம்பட்டோரின் குடும்பங்கள் இவர்களை எல்லாம் காவல்துறை மிக கீழ்த்தரமாக இப்போதும் நடத்திக் கொண்டிருக்கிறது.

சமீப நாட்களாக காவல்துறை இரவு நேரங்களில் சில கிராமங்களுக்குச் செல்வதும், அங்கு சுவர் ஏறி குதித்து வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆண்களை இழுத்துச் செல்வதும், இதன் காரணமாக பெரும்பாலான ஆண்கள் தலைமறைவாகி ஊரிலிருந்து இடம் பெயர்ந்துவிட்டதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் உறங்கும் வீடு என்கிற ஒரு குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாத அளவிற்கு வீட்டின் கதவுகளை உடைப்பது போல் தட்டுவதும், இரவு நேரங்களில் தேடுதல் வேட்டை, ரோந்து என்கிற பெயரில் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் விளாசுவதும், பல பேரைத் தேடிப் பிடித்து இழுத்து வந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

ஒருசோறு பதமாய்…
இந்தப் பின்னணியில் தூத்துக்குடி நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களோ, ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோ தங்கள் சொந்த வீடுகளில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல ஒரேயொரு அம்சத்தை மட்டும் இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும்.  இரவு நேரத்தில் பண்டாரம்பட்டிக்குச் சென்ற போலீஸ் வீட்டுக்குள்ளே உறங்கிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களை இழுத்து வந்திருக்கிறது. பிறகு, பி அன்ட் டி காலனியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரின் வீட்டிற்குச் சென்று கதவுகளை பலமாக தட்டியுள்ளனர். வீட்டி லிருந்த பெண்மணி காலையில் அவரை அழைத்து வருகிறேன் என்று சொன்ன பிறகும், காலால் கதவுகளை உதைத்திருக்கிறார்கள். பயந்து போன அவர் அருகில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களை எல்லாம் அலைபேசியில் அழைத்து தங்களை பாதுகாக்க வேண்டுமென கதறியிருக்கிறார்.

அப்போது அவரது நண்பர் ஒருவர் தனது மகனுடன் போலீஸ் தேடுதல் வேட்டை நடத்திய வீட்டிற்கு முன்பாகச் சென்று விபரங்களை கேட்டறிந்த பின்பு காவல்துறையினரிடம் காலையில் வருகிறேன் என்று சொல்லுகிறார்கள் ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று சொன்னதற்காக அப்படியானால் கூட வந்திருக்கும் தங்கள் பையனை நாங்கள் அழைத்துச் செல்கிறோம், அவரை ஒப்படைத்து விட்டு இவரை கூட்டிச் செல்லலாம் என்று கூறி முரட்டுத்தனமாக அந்த பையனை இழுத்துச் சென்று இருக்கிறார்கள்.  அதன் பிறகு அடுத்த நாள் காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ. வாசுகி அந்த பெண்களையெல்லாம் அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து முறையிட்ட பிறகு அன்று மாலை அவர் விடுவிக்கப்பட்டார். பக்கத்து வீட்டில் ஒரு பெண் தனக்கு பிரச்சனை என்று அழுகையோடு மற்றவர்களிடம் உதவி கேட்டால் உதவி செய்ய வந்தவரையே காவல்துறை இப்படி நடத்துவதன் பொருள் ஸ்டெர்லைட்டுக்காக தங்களின் விசுவாசத்தை காட்டுவதன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?.

இரவில் கோவில்களில் தங்கும் பெண்கள்…
இதற்கு பின்னும் வெறி தீராத காவல்துறை இரவு நேரங்களிலும், அதிகாலை 2 மணியிலிருந்து 4 மணி வரையில் மடத்தூர், திரேஸ்புரம் மற்றும் பல பகுதிகளில் புகுந்து வீட்டுச் சுவர் ஏறி குதித்து, கதவுகளை உடைப்பதை போல தட்டி சீருடை அணியாமல் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறது. இந்த பின்னணியில் பயந்துபோன பெண்கள் அனைவரும், ஒட்டுமொத்தமாக வீடுகளை காலி செய்துவிட்டு, இரவு நேரங்களில் அங்கிருக்கும் கோவில்களில் தங்குவது நடைமுறையாகி இருக்கிறது. இவற்றிற்கு எதிராக எந்தக் குரலும் எழக்கூடாது என்பதில் மாவட்ட காவல்துறை முனைப்பாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், அதேசமயம் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பேரணியையும் – பொதுக்கூட்டத்தையும் நடத்துவதற்கு முடிவு செய்தது. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி தூத்துக்குடி வந்த போது காவல்துறை சில நாட்கள் கழித்து பொதுநிகழ்ச்சிகளை நடத்தலாம், இப்போது நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று முரட்டுத்தனமாக மறுத்து விட்டது.

நீதிமன்றத்துக்குச் செல்லும் வாய்ப்பில்லா நிலையை ஏற்படுத்தும் குயுக்தி;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு அதன் பிறகு 18.06.2018 அன்று பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பாகவே அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. ஆனால் 14-ஆம் தேதி வியாழன் அன்று மாலை தூத்துக்குடி காவல்துறை பேரணிக்கும் – பொதுக்கூட்டத்திற்கும் அனுமதியில்லை என்று அலுவலக சுவரில் தன்னுடைய ஆணையை ஒட்டிவிட்டு சென்றுவிட்டது. தற்போது உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதாலும், வெள்ளிக்கிழமையன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறை என்பதாலும், சனி, ஞாயிறு கிழமைகள் வாரவிடுமுறை என்பதாலும் நீதிமன்றத்தைக் கூட அணுகக் கூடாது என்பதற்காக வியாழன் அன்று அந்த மறுப்பு ஆணையை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அது தவிர மாவட்ட நிர்வாகிகளை அழைத்து நயமாகப் பேசுவதும், மிரட்டுவதுமாக 18-ஆம் தேதி எந்த நிகழ்வும் நடந்து விட முடியாது என்று வீரம் காட்டியது. இப்போதும் இருக்கக் கூடிய கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தை அணுகுவதற்கு கூட அனுமதிக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்தது.

இந்தப் பின்னணியில் தூத்துக்குடி மாவட்டக்குழுச் செயலாளர் தோழர் கே.எஸ். அர்ச்சுணன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்காடும் தோழர்கள் ஷாஜி, செல்லான், சீனிவாசராகவன் மற்றும் தூத்துக்குடி வழக்கறிஞர் சுப்புமுத்துராமலிங்கம் ஆகியோர் முயற்சியின் காரணமாக நேற்றைக்கு (ஜூன் 16) நீதிமன்றம் பொதுக்கூட்டம் மட்டும் நடத்த அனுமதியளித்துள்ளது. சில நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்ததோடு தான் குறிப்பிட்ட படி தான் பொதுக்கூட்டம் நடக்கிறதா என்பதை முழுமையாக காணொளி காட்சி அனுப்பி தன்னிடம் 19ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. காவல்துறை இந்த பொதுக்கூட்டம் நடந்து விடக் கூடாது என்பதில் மிகத்தீவிரமாக முனைப்பு காட்டியது. இப்போது இருக்கும் பயத்தையும், பீதியையும் அப்படியே பாதுகாப்பது என்பது தான் அவர்களின் நோக்கமாகத் தெரிகிறது.

போராட விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே…
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான ஆணை சட்டத்தின் முன்னால் அதாவது நீதிமன்றத்தின் முன்னால் நிற்பதற்கு வாய்ப்பில்லை என்று அன்றைய தினமே பலருக்கு அச்சம் இருந்தது. அதே அச்சத்தைத் தான் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் குழப்பம் எதுவுமின்றி முறையான ஆணையை வெளியிடுக என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பயமுறுத்தல், நடவடிக்கைகளை பரிசீலித்தால் பலவீனமான அரசாணை, அதன் மீது ஸ்டெர்லைட் நீதிமன்றம் செல்வதற்கான வாய்ப்பு, ஒருவேளை நீதிமன்றம் ஸ்டெர்லைட்டை திறக்க உத்தரவிட்டால் அப்போது தூத்துக்குடி மக்கள் போராடி விடக் கூடாது என்பதற்கான நோக்கத்திலேயே இவற்றையெல்லாம் செய்வதாகத் தெரிகிறது. பொதுக்கூட்டமே நடத்தக் கூடாது என்று சொன்ன காவல்துறை, பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று தெரிவித்த பிறகு இரண்டு பேருக்கு மேல் பேசக் கூடாது என்றெல்லாம் நீதிமன்றத்தில் வாதாடியது. 20க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கின்போது மதுரையில் முகாமிட்டிருந்ததாக தெரிகிறது.

பயமுறுத்துவதன் மூலமாகவே எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என்றால் ஆதிகாலம், மன்னர் காலம், இங்கிலாந்து ஆட்சி காலம் அல்லது அவசர நிலை காலம் இவற்றில் ஏதாவது ஒன்று இன்றும் நீடித்திருக்க வேண்டும். மக்கள், தாங்கள் நினைப்பது சரி என்பதை தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டால் எந்த சக்திக்கும் அவர்கள் அடிபணிய மாட்டார்கள் என்பது தான் வரலாறு. தூத்துக்குடி மக்களும் இந்த அடக்குமுறைகளை மீறி ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் உள்நோக்கத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள். நடைபெறும் இரவு கைதுகளும், சுவர் ஏறி குதித்தலும், வழக்குகள் புனைதலும் இனி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை உத்தரவாதப்படுத்த முடியும் என்ற நினைப்பின் காரணமே. ஆனால், தூத்துக்குடி மக்கள் என்ன விலை கொடுத்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது தான் இன்று இருக்கும் நிலை.

ஸ்டெர்லைட்டுக்கு சேவகம் செய்வதற்காக 13 கொலைகள், பலநூறு பேருக்கு படுகாயங்கள் ஏற்படுத்திய பிறகும் மக்கள் பயந்துவிடவில்லை. இதை வலுப்படுத்தவும், மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்திருக்கிறது.  18.06.2018 அன்று திட்டமிட்டபடி தோழர் பிருந்தா காரத் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார். காயம்பட்டவர்களை, இறந்தவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பதற்கும், புனையப்பட்ட பொய் வழக்குகளை முறியடிப்பதற்கும், மக்களுக்கு நம்பிக்கையளிக்கவும் இந்த பொதுக்கூட்டம் உதவும் என்பதோடு, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பளிக்கவும் அவர்களின் பயத்தைப் போக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மக்களோடு களத்தில் நின்றுள்ளது. இனியும் அது அப்படித்தான் இருக்கும்.

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர்

Leave A Reply

%d bloggers like this: