பெங்களூரு :

கௌரி லங்கேஷை கொலை செய்ததாக விஜயபுராவிலுள்ள சிந்தகி என்ற பகுதியை சேர்ந்த பரசுராம் வாகுமார் என்பவர் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிக்கையாளரான கௌரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி பெங்களூருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கர்நாடக மாநிலத்தில் மதவாதத்திற்கு எதிரான அமைப்பில் இடதுசாரிகளுடன் தீரமாக செயல்பட்டவர். லிங்காயத்துகளுக்கான சிறுபான்மை அங்கீகாரத்திற்காக கடுமையாக பாடுபட்டவர்.

மேலும், லங்கேஷின் கொலையில் தொடர்புடையதாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6வதாக பரசுராம் வாகுமார் கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்டு கூடுதல் தலைமை நகர நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். வாகுமாரை மேல் விசாரணைக்காக 14 நாட்கள் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையில் இந்து மதத்தை காப்பாற்றவே கௌரி லங்கேஷை கொலை செய்தேன் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார். லங்கேஷின் கொலைக்கு நடந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கிடையே இவர்கள் அவர் கொலை செய்யப்பட்டதை கொண்டாடியும் உள்ளனர்.

இந்து மதத்தை பாதிப்பிலிருந்து காப்பாற்ற லங்கேஷை கொலை செய்ய வேண்டும் என இந்து மதவாத அமைப்பான ஸ்ரீ ராம சேனாவினால் இருந்து தூண்டப்பட்டதையடுத்து அவரை கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் ஸ்ரீ ராம சேனாவிலிருந்து வாகுமாரை சந்தித்தவர் அவருக்கு பல உறுதிகளை அளித்துள்ளார். மேலும், முகநூலில் ஸ்ரீ ராம சேனா அவருக்கும், அவரின் குடும்பத்திற்கும் நிதி திரட்டியுள்ளனர்.

மேலும், வாகுமாருக்கு துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன மற்றும் இந்த கொலையில் இன்னும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கப்படுகின்றனர்.  இதையடுத்து சிந்தகி பகுதியின் ஸ்ரீ ராம சேனாவின் தலைவராக இருக்கும் ராகேஷ் மாதாவிற்கு சிறப்பு விசாரணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: