பீப்பிள்ஸ் டெமாக்ரசி பத்திரிகையில் திரைப்படம் பற்றிய விவாதம் என்பது மிகவும் அசாதாரணமானது. ஆனால் காலாவும் ஒரு அசாதாரண படமே ஆகும். நிச்சயமாக ஹீரோ வில்லனைத் தோற்கடிப்பதாகவோ அல்லது தீமையை நன்மை வெற்றி கொள்வதாகவோதான் அனைத்துத் திரைப்படங்களுமே இருக்கும். அந்த வகையில் பார்த்தால், காலாவும்கூட ஒரு வழக்கமான படமாகத்தான் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் விவாதிக்கப்படும் பிரச்சனைகள், கதையின் அடுக்குகளுக்காக இருக்கின்ற அரசியல் அடையாளங்கள் ஆகியவை வந்திருக்கின்ற இந்த நேரம் இந்தப் படத்தை மிகவும் அசாதாரண படமாக ஆக்கி இருக்கிறது. தொழில்நுட்ப விவரங்கள், கதை கையாளப்பட்டிருக்கும் விதம், அல்லது நடிகர்களின் திறன் ஆகியவை குறித்து விவாதிப்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. இந்தப் படத்தில் வருகின்ற பிரச்சனைகளின் அரசியல் பற்றியும், பயன்படுத்தப்பட்டிருக்கின்ற குறியீடுகள் குறித்தும் விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

உற்பத்திக் கருவியாக நிலத்தின் முக்கியத்துவத்தை குரல் மூலமாக விளக்குவதாக இந்தத் திரைப்படம் தொடங்குகிறது. சிறிய நிலப்பகுதியை தன்னுடைய வாழ்வாதாரமாக அல்லது தற்சார்பு விவசாயத்திற்காகக் கொண்டவர்கள், உபரிகளைப் பெறுவதற்காகவும், தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும்,  தங்களுடைய அதிகாரத்திற்கான சின்னமாகவும் பெருமளவிலான நிலப்பரப்பை கொண்டவர்கள் என்று இரண்டு வகைகளாக நில உரிமையாளர்கள் இருக்கிறார்கள். முதலாவது குறிப்பிடப்பட்டிருக்கும் ஏழை மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக நில உரிமையைப் பாதுகாக்க முயற்சிப்பவர்களாகவும், இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பணக்காரர்கள் தங்களுடைய லாபத்தை மேலும் அதிகப்படுத்துவதற்காக அதிகமான நிலங்களை அபகரித்துக் கொள்ள முனைபவர்களாகவும் இருப்பதால் இந்த இரு அம்சங்களுக்கிடையில் எப்போதுமே ஒரு முரண்பாடு நிலவிக் கொண்டே இருக்கிறது. இந்த முரண்பாடே மும்பையில் தாராவி பகுதியில் நடைபெறுகின்ற இந்த திரைப்படத்தின் மையக் கருப்பொருளாக அமைந்திருக்கிறது.

தாராவி பற்றியோ அல்லது தாராவியில் நடப்பதாகவோ இதற்கு முன்பாகவும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது ஒன்றும் முதன்முறை அல்ல. அவை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் போன்ற பல மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளை, அவர்களின் கனவுகளை, வறுமையை மற்றும் அங்கு வாழ்கின்ற கும்பல்களைப் பற்றியதாக அந்த திரைப்படங்கள் இருந்தன. அங்கே வாழுகின்ற மக்கள், வாழுகின்ற நிலத்துடன் அவர்களுக்கு உள்ள உறவு, நகரின் தூய்மை மற்றும் அழகுபடுத்துதல் என்ற பெயரில் அவர்களுடைய நிலங்களை பணக்காரர்கள் அபகரித்துக் கொள்வதற்கான முயற்சிகள் என்று அனைத்தையும் தன்னிடம் கொண்ட திரைப்படமாக காலா இருக்கிறது.

தூய்மை மற்றும் சுத்தம் என்று மிக முக்கியமான இரண்டு விஷயங்களை நிலம் என்கிற மைய கருப்பொருளோடு பிணைத்து காலா பேசுகிறது. முக்கியமாக. இங்கு தூய்மை என்பது சேரிகளோடு  தொடர்புடைய உடல் சார்ந்த அம்சமாக மட்டும் இல்லாமல், சாதியுடன் தொடர்புடைய கருத்தியல் அம்சமாகவும் இருக்கிறது. தூய்மையின்மை என்பதை தலித்துகளின் இருப்பு மற்றும் வாழ்க்கையோடு தொடர்புபடுத்துகின்ற உயர் சாதிக் கருத்து முரண்பாட்டை அம்பலப்படுத்த இந்த திரைப்படம் முயற்சிக்கிறது. இதைப் புரிந்து கொள்வதற்கு, நகர்ப்புற இந்தியாவில் இருக்கின்ற சேரிகளையும், சேரியில் வசிக்கின்ற மக்களை அங்கிருந்து அகற்றுகின்ற அரசின் திட்டங்களையும் நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

நகரமயமாக்கல் என்பது வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக  கருதப்படுவதால், நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் நகர்ப்புறப்பகுதிகள், குறிப்பாக நகரங்கள் மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்திற்கும், வளர்ந்து வருகின்ற நடுத்தர வகுப்பினருக்கும் வசிப்பிடங்களாக இருக்கின்ற அந்த நகரங்கள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63 சதவீதத்தை உருவாக்குகின்றன.

தடையற்ற, சிறந்த சேவைகள் அனைத்தையும் கொண்ட, புதிதாக உருவாகின்ற ’மூடப்பட்ட வாயில்கள்’ கொண்ட உயர்தட்டு மக்கள்  வசிக்கின்ற இடங்கள்; பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காகத் தொடர்ந்து போராடுகிற நடுத்தர வகுப்பினர் பெரும்பாலானவர்கள் வாழ்கின்ற இடங்கள்; அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பெரும்பான்மையான ஏழைகள் வசிக்கின்ற குடிசைகளைக் கொண்ட சேரிகள் என்று தனித்துவமான பிரிவினை கொண்டதாக இந்த நகர்ப்புறப் பகுதிகள் இருக்கின்றன.

2011இல் எடுக்கப்பட்ட சேரி மக்கள் கணக்கெடுப்பின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் சேரிகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கை  37.14 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. மூன்றில் இரண்டு பங்கு நகரங்களில் இத்தகைய சேரிகள் காணப்படுகின்றன. சேரிவாசிகளில் பெரும்பான்மையினர் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். குடியிருப்பு வசதிகள், வீடுகளை இடிப்பது, வீடுகளில் இருந்து வெளியேற்றுவது, குடிநீர், சுகாதாரம், பொது விநியோக முறை, கழிப்பறைகள், சுகாதார சேவைகள், பள்ளிகள், ஓய்வூதியங்கள், காவல்துறை துன்புறுத்தல், குண்டர்களின் அட்டகாசங்கள், நிறுவன கடன் வசதிகளை அணுகுவதில் குறைபாடு, ஊழல், குடிபழக்கம், போன்ற பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கின்ற பிரிவுகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களில் 96 சதவீதம் பேருக்கு குடியிருப்பதற்கான வீடுகள் பற்றாக்குறையாக உள்ளன. மின்சாரம், குழாய் நீர், சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகள் சேரிகளில் இருக்கின்ற 36 சதவீத வீடுகளில் இருக்கவில்லை.

சமூகப் பிரிவு என்பதுவும்கூட நகரங்களில் பெரும்பாலும் இருக்கிறது. முஸ்லீம்கள் குறிப்பிட்ட பகுதிகளில், அவர்களுக்கென்ற பிரத்யேகமான இடங்களில் வாழ்கின்றனர். அதேபோல, தலித்துகளும் நகர்ப்புறங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டுமே வாழ்கின்றனர். பாகுபாடு காட்டுவதன் மூலம் இந்த சமூகங்களைத் தனித்து வகைப்படுத்துவதன் விளைவாக, அவர்களில் பெரும்பாலானோர் சேரிகளிலேயே வசிக்கின்றனர். எனவே, ‘தூய்மை மற்றும் சுத்தம்’ போன்றவை சாதி மற்றும் மதத்துடன் தொடர்புடைய சமூகக் கருத்தாகவே இருக்கின்றன. ஏழை மக்களிடம் உள்ள நிலங்களை ரியல் எஸ்டேட் மற்றும் நகரை அழகுபடுத்தும் நோக்கங்களுக்காக எடுத்துக் கொள்வதற்காக மட்டுமே தூய்மை என்ற பெயரில் சேரிகளை விட்டு வெளியேற்றுவது நடைபெறுவதாக இல்லை. தலித்துகள் மற்றும் முஸ்லீம்களை புறநகர்ப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம், நகரின் மையமானது உயர்தட்டு மக்கள், செல்வந்தர்கள், உயர்சாதியினர் ஆகியோருக்கானதாகவும், அதே சமயம் நகரத்தின் வெளிப் பகுதி ஏழை, தலித்துகள், முஸ்லீம்கள் அல்லது சமுதாயத்தில் உள்ள ‘மற்றவர்கள்’ ஆகியோருக்கானதாகவும் மாற்றி அமைத்திட எடுக்கப்படும் முயற்சியாகவே அது இருக்கிறது. காலா திரைப்படம் இந்தப் பிரச்சினைகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

காலாவிலுள்ள வில்லனைப் பொறுத்த வரை, ‘தூய்மையான, சுத்தமான மும்பை’, குடிசைகளை மறுசீரமைப்பு செய்வது போன்றவை இந்தக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. தன்னிடம் உள்ள செல்வம், உயர்சாதி, மத அடையாளம் ஆகியவற்றிலிருந்தே தனக்கான அதிகாரத்தைப் பெறுகின்ற அவர் ‘தான் ஆளப் பிறந்தவன்’ என்றும் கூறிக் கொள்கிறார். இது நம்முடைய காலத்தை தெளிவாகப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. “சேரியில்லாத மும்பையை உருவாக்குவது என்கிற ஒரு முழுமையான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் இருக்கின்றது. மத்திய – மாநில  அரசுகளின் திட்டத்திற்கு வலு சேர்ப்பதாகவும் இருக்கிறது ….”. இது இந்தப் படத்தில் தோன்றுகின்ற வில்லன் கூறுகின்ற வார்த்தைகளல்ல, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகின்ற வார்த்தைகள். பட்னாவிஸ் பேசுகின்ற இந்த மத்திய – மாநில அரசுகளின் லட்சியத் திட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டமே இருக்கிறது.

தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்குமான வீட்டுவசதி திட்டம் என்று பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைப்பதாக ஸ்மார்ட் சிட்டி திட்டமானது இருக்கிறது. அந்த திட்டத்தின் வழிகாட்டுதல்களில், “ஏற்கனவே சேரிகளை உள்ளடக்கி இருக்கின்றன இடங்களை தகுதி வாய்ந்தவையாக மறுசீரமைப்பு செய்து சிறப்பாகத் திட்டமிடப்பட்டவைகளாக அவற்றை மாற்றியமைத்து அதன் மூலமாக ஒட்டுமொத்த நகரத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது” என்று அந்த திட்டத்தின் நோக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “மறுசீரமைப்பின் மூலம்  ஏற்கனவே கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற சூழலை முற்றிலுமாக மாற்றுவதோடு, பலவகைகளில் நிலத்தைப் பயன்படுத்தி மேம்பட்ட உட்கட்டமைப்புடன் மக்களின் அடர்த்தியை அதிகரிப்பதற்கானதொரு புதிய வடிவமைப்பை உருவாக்குவதை இந்த திட்டம் சாத்தியப்படுத்துகிறது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த மறுசீரமைப்பை தடங்கலின்றி உறுதி செய்வதற்கு தெளிவான அரசியல் முடிவுகள் தேவைப்படுவதாக பன்னாட்டு ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜூபின் கூப்பர் வெளிப்படையாகக் கூறுகிறார். இவ்வாறான செயல்களைத் தன்னுடைய ரியல் எஸ்டேட் ஆட்களுடன் சேர்ந்து தாராவியில் செய்வதற்கான துல்லிய நோக்கம் கொண்டவராக ஆளதிகாரம் மற்றும் அரசியல் அதிகாரம் கொண்டிருப்பவராக அந்த திரைப்பட வில்லன் இருக்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாக, குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக மும்பையில் உள்ள தாராவி மற்றும் அது போன்ற பிற சேரிப்பகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான வலுவான முயற்சிகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. மும்பையில் உள்ள சைஃபி புர்கானி மேம்பாட்டுத் திட்டம், பெண்டி பஜார் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்புதலை வழங்குவதாக ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆவணம் இருக்கிறது. உள்ளூர்வாசிகளின் தேவைகள் என்னவென்பது குறித்தும், அவர்கள் வசிக்கின்ற நிலத்தை தாங்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதையும் பற்றி அவர்களிடம் கலந்துரையாடல் நடத்தப்படுவதில்லை என்பதே இவ்வாறான திட்டங்கள் அனைத்திலும் இருக்கின்ற முக்கிய குறைபாடுகளாக இருக்கின்றன.

புதிய தாராளமயக் கொள்கைகளின் விளைவாக முறைசாரா வேலைகள் அதிகரித்திருப்பதோடு, வீடு சார்ந்த வேலைகளுக்கான இடங்களாகியுள்ள பெரும்பாலான சேரிகள் பல்வேறு நிறுவனங்களின் உற்பத்திச் சங்கிலியில் முக்கிய பங்கை வகிப்பவையாக மாறியிருக்கின்றன. எந்தவொரு மறுசீரமைப்பு திட்டமும் இந்த உண்மைகளைக்  கவனத்தில் கொண்டு அதற்குத் தகுந்தாற் போன்று திட்டங்களை வடிவமைக்க வேண்டும். ஆனால் நிலத்தைக் கையகப்படுத்தி அவற்றை வர்த்தக நோக்கங்களுக்காக விற்பதற்காக இவ்வாறு இருக்க வேண்டிய நோக்கங்கள் அனைத்தும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன.

தாராவி மறுசீரமைப்பிற்கென்று சமர்ப்பிக்கப்பட்டதொரு திட்டத்தில், சேரிவாசிகளுக்கென 30,000 சதுர மீட்டர், வர்த்தக விற்பனைக்கென 40,000 சதுர மீட்டர் நிலங்களைக் கட்டுமான  நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசாங்கம் தன்னுடைய ஒப்புதலை அளித்தது. ‘மும்பை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில், முதல் கட்டத்திலேயே பல அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்வதற்காகவே கட்டப்படுவதாக’ பலராலும் மேற்கோள் காட்டப்படுகின்ற பெண்டி பஜார் திட்டம் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்த திட்டம் நிறைவேறிய பிறகு, இந்த பஜார் யாரும் நுழைய முடியாத பகுதியாக அறிவிக்கப்பட்டு, தங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு வரம்புக்குட்பட்டே நுழைவதற்கான அனுமதி வழங்கப்படும்’ என்று அச்சமடைகிற சில்லறை விற்பனையில் பைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்கிற ரத்தன் போன்ற வியாபாரிகளை அந்தச் செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த விவகாரங்களை எல்லாம் காலா மிகவும் வெற்றிகரமாகக் காட்டுகிறது. ரியல் எஸ்டேட் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையே நிலவுகின்ற உறவுகளை அது அம்பலப்படுத்துகிறது,

‘தூய்மை மற்றும் சுத்தம்’ என்ற பகட்டுச் சொற்களுக்குப் பின்னர் இருக்கும் உண்மைகளைத் தோலுரித்துக் காட்டுகிறது.காலாவில் காணப்படும் குறியீடுகள் தவிர்க்க இயலாதவையாக இருக்கின்றன.  தூய்மையை வலியுறுத்துகின்ற அந்த வில்லன் எப்போதுமே சிறிதும் கறையில்லாத தூய வெள்ளை உடை அணிந்து காவித் துண்டை அணிந்திருக்கிறார்.

கதாநாயகனோ தன்னுடைய காலா என்ற பெயர் குறித்து பெருமிதம் கொள்பவனாக, பெரும்பாலும் கருப்பு உடையை, சில சமயங்களில் நீல நிற உடையை அணிந்து தன்னுடைய தலித் அடையாளத்தைப் பெருமையாக வெளிக்காட்டிக் கொள்பவனாக இருக்கிறான். அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாறிய ஆண்டான 1956 என்ற எண்ணைக் கொண்டதாக அவன் வைத்திருக்கும் ஜீப்  இருக்கிறது. ஹிப்-ஹாப், பேசுகின்ற மொழி மற்றும் திருவிழாக்கள் என்று தாழ்த்தப்பட்டவர்களின் மாற்றுக் கலாச்சாரத்தைக் கொண்டாடுபவனாக காலா இருக்கிறான். காலாவின் மேசை மீது ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘அசுரன்’ என்ற புத்தகம் இருப்பதாகக் காட்டப்படுகிறது.

ஹீரோவின் மகன்களில் இருவருக்கு சிவா, லெனின் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தன்னுடைய உடல் பலத்தை நம்புகிறவனாக சிவாவும், மக்களை அணிதிரட்டி போராட்டங்களை ஏற்பாடு செய்பவனாக லெனினும் இருக்கிறார்கள். தன்னுடைய தந்தையைப் பாதுகாக்கும் போது சிவா உயிரிழக்க, ​​லெனின் தப்பிப் பிழைக்கிறான்.

மகத்தான புரட்சியாளரான லெனினின் பெயரைக் கொண்டிருப்பதால், தன்னுடைய மகனான லெனினைத் திட்ட முடியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் கதாநாயகன் காலா ஓரிடத்தில் ‘இரண்டு அல்லது மூன்று புத்தகங்களை வாசிப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் சமுதாயத்தை மாற்றியமைக்க முடியாது; மக்களுடனே தங்கியிருந்து அடிமட்டத்தில் வேலை செய்து மக்களை புரிந்து கொள்வதன் மூலமே நீங்கள் அதைச் செய்ய முடியும்’ என்கிற மிகவும் சுவாரஸ்யமான அறிவுரை ஒன்றைத் தருகிறார்.

படத்தில் வருகின்ற பல காட்சிகள் பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரத்தைப் பற்றி உரத்துப்  பேசுகின்றன. போராட்டக் காட்சிகளில், குறிப்பாக கதையில் வருகின்ற முக்கிய பெண் ஒருவரின் உடைகளைக் களைந்து காவலர்கள் அவரை அவமானப்படுத்த முயலும்போது, அந்தப் பெண் தன்னுடைய உடைக்குப் பதிலாக லத்தியைத் தேர்ந்தெடுக்கும் காட்சி  ஆயிரம் விஷயங்களைப் பேசுகின்றது. அனைத்து ஆண்களும் பெண்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்கிற கதாநாயகன் ஆண்கள் சமையலில் முக்கிய பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். கதாநாயகனுக்கெதிராக எதிர்த்து நிற்கும் வலிமை நிறைந்த, கணவனின்றி தனித்து வாழ்கின்ற தாய்;, மிகவும் தைரியமான தன் மனைவி சொல்வதைக் கேட்பவராக பிற படங்களில் வருவதைப் போலல்லாமல் இந்தப் படத்தில் வருகின்ற ரஜினிகாந்த் என்று படம் முழுவதும் மிகச் சிறப்பான காட்சிகள் நிறைந்திருக்கின்றன.

படத்தில் இன்னொரு அற்புதமான அம்சம் உச்சகட்ட காட்சி ஆகும். மக்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளை நிறுத்தியும், வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டியும் சேரிவாசிகளின் ஒற்றுமையை உடைக்க வில்லன் முற்படுகையில், மற்ற அனைத்து அடையாளங்களையும் மறந்து தொழிலாள வர்க்க அடையாளத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கதாநாயகன் மக்களைக் கேட்டுக் கொள்கிறார். தங்களுடைய கைகளில் உள்ள ஆயுதத்தை, அதாவது உழைப்பின் ஆற்றலைப் பற்றி அவர்களுக்கு அவர் நினைவூட்டுகிறார். வேலைநிறுத்தம் செய்ய அவர்களை அழைக்கிறார். அனைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் சமுதாயத்தில் உள்ள பல பிரிவுகளிடையே ஒற்றுமை தேவை என்பதை கருப்பு, சிவப்பு மற்றும் நீல வண்ணங்கள் மூலம் சித்தரித்துக் காட்ட்டப்படுகிறது.

இந்த படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் இயக்குனரான பா ரஞ்சித் தன்னுடைய முத்திரையைப் பதித்திருக்கிறார். ஆளும் வர்க்கத்தை, சாதி மேலாதிக்கத்தை எதிர்த்து, இனவாத சக்திகளைத் தோற்கடிப்பதற்கு கலாச்சாரத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை அவர் நமக்கு காட்டியிருக்கிறார்.

http://peoplesdemocracy.in/2018/0617_pd/kaala-times-and-politics

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு,விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.