பெங்களூரு:
ஹிந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காகவே, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றதாக போலீசாரிடம் சிக்கிய பரசுராம் வாக்மோர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவர், சாதி-மதப் பாகுபாடுகள் மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார். முற்போக்குச் சிந்தனையாளர். துணிச்சல் மிக்கவர்.அவரை, பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரிலுள்ள அவரது வீட்டின் முன்பாகவே மர்ம நபர்கள், கடந்த 2017 செப்டம்பர் 5-ஆம் தேதி சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இப்பிரிவினர், நீண்ட விசாரணைக்குப் பிறகு பரசுராம் வக்மோர் உள்பட மொத்தம் 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பரசுராம் வாக்மோர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘நமது மதத்தை காப்பாற்றுவதற்காக ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என 2017-ஆம் ஆண்டு மே மாதம், ஒரு குழு என்னிடம் வந்தது; ஆனால், நான் யாரை கொலை செய்ய வேண்டும், எதற்காக அவரைக் கொலை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெரிவிக்கவில்லை; ஆனால், இந்த கொலைக்காக எனக்கு மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது; செப்டம்பர் 3-ஆம் தேதி என்னை பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்; அங்கு இருவேறு அறைகளில் தங்க வைத்தார்கள்; செப்டம்பர் 5-ஆம் தேதி மாலையில் என் கையில் துப்பாக்கியைக் கொடுத்து, கவுரி லங்கேஷ் வீட்டிற்கு முன்பு என்னைக் கொண்டுபோய் விட்டனர்; கவுரி லங்கேஷ் காரை நிறுத்தி விட்டு இறங்கினார்; நான் மெதுவாக இருமினேன்; அப்போது என்னைப் பார்த்து லங்கேஷ் திரும்பினார்; உடனே, அவரை நான்குமுறை துப்பாக்கியால் சுட்டேன்; அன்றிரவே நான் பெங்களூருவை விட்டும் வெளியேறி விட்டேன்; ஆனால், தற்போது லங்கேஷை கொலை செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன்’.
இவ்வாறு பரசுராம் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.ஆனால், இந்த வாக்குமூலத்தில் பரசுராம் முழு உண்மைகளையும் கூறியதாக தெரியவில்லை; குற்றவாளிகளைத் தப்பவிடும் முயற்சி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். கவுரி லங்கேஷ் மட்டுமல்ல, பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம். கல்புர்கி ஆகிய மூவரும் ஒரே நபரால்தான் கொல்லப்பட்டுள்ளனர்; பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் ஒரே ரகத்தைச் சேர்ந்தது என்று ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு பார்க்கையில், கவுரி லங்கேஷை மட்டும் கொலை செய்ததாக பரசுராம் கூறுவதில் சந்தேகம் எழுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கவுரி லங்கேஷ் கொலையில் சந்தேகிக்கப்படும் ஸ்ரீராம் சேனா தலைவர் முத்தலிக்குடன் பரசுராம் எடுத்துக் கொண்ட புகைப்படம், அவரும் கொலைகாரக் கூட்டத்தைச் சேர்ந்தவர்தான் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது; எனவே, யாரோ தன்னைப் பயன்படுத்திக் கொண்டதாக பரசுராம் வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியாது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த அடிப்படையில், மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரும், ‘பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கும்பலுக்கு மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது’ என்று கூறியுள்ளார். குறைந்தபட்சம் அந்த வன்முறைக் கும்பலுக்கு ஐந்து மாநிலங்களில் தொடர்பு இருக்கிறது; இந்த கும்பலில் 60 பேர் வரை இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.