புதுதில்லி:
இந்தியா கடற்படை மையம் அமைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக சீஷல்ஸ் நாட்டு அதிபர் டானி பௌர் அறிவித்துள்ளார்.கடல் பாதுகாப்பில் இந்தியா சீஷல்ஸ் நாட்டுக்கு உதவி செய்வதென்றும், பதிலுக்கு இந்திய ராணுவம் சீஷல்ஸ் நாட்டில் கடற்படை மையம் ஒன்றை அமைத்துக் கொள்வது என்றும் கடந்த மார்ச் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனடிப்படையில், கடற்பாதுகாப்புப் பணிக்காக, அண்மையில் பாதுகாப்பு கப்பல் ஒன்றையும் சீஷல்ஸ் நாட்டுக்கு இந்தியா அளித்தது.இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் தங்கள் நாட்டில் கடற்படை மையம் அமைப்பதா? என்று சீஷல்ஸ் நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அங்கு கோரிக்கைகள் எழுந்ததாக தெரிகிறது.

இதையடுதது, இந்தப் பிரச்சனை தொடர்பாக, தனது இரண்டாவது பொதுமக்கள் சந்திப்பை நடத்திய சீஷல்ஸ் அதிபர் டானி பௌர், அதன் முடிவில், இந்தியா கடற்படை மையம் அமைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். கடற்படை மையம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

கடல் பாதுகாப்பு குறித்து, சீஷல்ஸ் – பிரான்ஸ் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அப்போது சீஷல்ஸ் படைக்கு கடல் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டது. இதன் பின்னணியிலேயே இந்தியாவுடனான ஒப்பந்தத்தை சீஷல்ஸ் நாடு முறித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.