போபால்:
மத்தியப்பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம்பெண்களை, சிறையில் அடைத்த போலீசார், அவர்களை மிகமோசமான முறையில் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மத்தியப்பிரதேச போலீஸ் தேர்வில், பெண்களுக்கான உயரத்தைக் குறைக்க வேண்டும் என்று தேர்வுக்கு விண்ணப்பித்த இளம்பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் முதல்வரை கடந்த 13-ஆம் தேதி முற்றுகையிட்டனர்.
இவர்களில் 9 பேரை மத்தியப்பிரதேச காவல்துறை கைது செய்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 151-ன் கீழ் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், மறுநாள் விடுவித்தனர்.

ஆனால், வெளியே வந்த இளம்பெண்கள், சிறையில் அடைக்கப்பட்ட தங்களை போலீசார் மிக மோசமாக நடத்தியதாக குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்கள், ‘நாங்கள் கிரிமினல்கள் போன்று நடத்தப்பட்டோம். முதலில் போலீசார் எங்களை வேனில் ஏற்றினார்கள், போபாலுக்கு மூன்று மணி நேரங்கள் பயணித்தோம். எங்களுடைய செல்போன்களை பறித்துக் கொண்டார்கள். எங்களுடைய பெற்றோர்களிடம் பேச அனுமதிக்கவில்லை. நாங்கள் சிறைக்கு இரவு அழைத்து செல்லப்பட்டோம்.

அங்கு சென்றதும், நாங்கள் தனியாக ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டோம், சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம், அதாவது நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோமா? என பரிசோதனை நடத்தப்பட்டது; ஆனால், ஆண்களையும் வைத்துக் கொண்டே இந்த பரிசோதனையை நடத்தினார்கள்; மேலும் எங்களைக் கொலைக் குற்றவாளிகளுடன் உட்கார வைத்து அவமதித்தனர்; எங்களுக்கு மிகுந்த அவமானமாக போய்விட்டது’ என்று கூறியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு மத்தியப்பிரதேசத்தில் விவாதங்களை கிளப்பியது. பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் மத்தியிலிருந்து கண்டனங்களும் குவிந்தன.இதையடுத்து, பிரச்சனையை சமாளிப்பதற்காக, கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்த பெண்களின் குறைந்த பட்ச உயரம் 158 செ.மீ. இருக்க வேண்டும் என்ற நிலையில், அதில் 3 செ.மீ. குறைக்கப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவசர அவசரமாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.