புதுதில்லி:
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, தண்ணீர் தட்டுப்பாட்டுப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய அபாயத்தில் இந்தியா இருப்பதாக நிதி அயோக் அமைப்பு எச்சரித்துள்ளது.நாட்டில் இப்போது வரை, 600 மில்லியன் மக்கள் (60 கோடி பேர்) கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் வசதி இன்றி உயிரிழந்து வருகின்றனர்; 40 சதவிகித நிலத்தடி நீர் முறையற்ற பயன்பாட்டினால் சுரண்டப்பட்டு விட்டது; 70 சதவிகித விநியோகம் மாசுபாடான நீராக உள்ளது.
இந்நிலையில், தில்லி, பெங்களுரூ, சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் 2020-ஆம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வறண்டு விடும். இதனால் 100 மில்லியன் மக்கள் (10 கோடி பேர்) பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று நிதி ஆயோக் கூறியுள்ளது.

இந்தியாவின் நீர்த்தேவை, 2030-ஆம் ஆண்டு, இப்போதுள்ள விநியோக அளவை விட அதிகமாகி விடும். அதேநிலை தொடர்ந்தால், 2050-ஆம் ஆண்டு நாட்டின் சராசரி உற்பத்தியிலும் 6 சதவிகிதம் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று நிதி ஆயோக் எச்சரித்துள்ளது.பல மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு மழை பெய்துள்ள போதிலும் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டதற்கு தண்ணீர் மேலாண்மை சரியாக இல்லாததே காரணம்; குறிப்பாக குளம், குட்டை, வாய்க்கால், பாசன ஏரிகள் என எதையும் தூர் வாரி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடும் நிதி ஆயோக், ‘நீர் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன; நீர் ஆதாரங்களை மாசுபடுத்தி, இருக்கும் தண்ணீரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாற்றப்படுகின்றன; நீரை மக்களுக்கும் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் சரியாக இல்லை’ என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நீர் மேலாண்மையை கையாளும் மாநிலங்களையும் தரவரிசைப்படுத்தியுள்ள நிதி ஆயோக், இதில், குஜராத், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நீர் மேலாண்மையில் முதலிடத்தில் உள்ளதாகவும், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதுமே தண்ணீர் முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் தண்ணீர் பிரச்சனையில் சிக்கப் போவதை நிதி ஆயோக் முன்கூட்டித் தெரிவித்துள்ளது. அதாவது, விவசாயம், தொழிற்சாலை, வர்த்தகம் போன்ற தேவைகளுக்கு அல்ல, அன்றாட குடிநீர் தேவைக்கே தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என்பதே அந்த எச்சரிக்கை.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தை போல, விரைவில் பெங்களூருவும் தண்ணீர் இல்லாத நகரமாக மாறப்போகிறது என்று அண்மையில் ஒரு ஆய்வு எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால், நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் சென்னை, ஹைதராபாத், தில்லி ஆகிய நகரங்களும் அந்த வரிசையில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.‘இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பிரச்சனை எழுந்துள்ளது; ஆனால் இதன் முக்கியத்துவம் பலருக்கும் தெரியவில்லை; இதை நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாட்டின் சில பகுதிகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத இடங்களாக மாறி விடும்’ என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறுகிறார்.

Leave A Reply

%d bloggers like this: