வால்பாறை,
வால்பாறை சின்கோனா பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை இழுத்து செல்ல முயன்ற சிறுத்தையை விரட்ட முயன்ற பெண்ணை சிறுத்தை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சின்கோனா அரசு தேயிலை தோட்டகழகத்தில் பணியாற்றி வருபவர் மாலதி (37).இவரது கணவர் பாலகிருஷ்ணன் (39). தனியார் தேயிலை தோட்டத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு நித்தீஸ் (4) மற்றும் தீபக் என்ற 8 மாத குழந்தையும் உள்ளனர். வியாழனன்று மாலை நித்திஸ் தனது வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை அச்சிறுவனை இழுத்து செல்ல முயன்றது. அதனைக்கண்ட சிறுவனின் தாயார் மாலதி சிறுத்தையை விரட்டியுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மாலதி மீது பாய்ந்த சிறுத்தை, அவரது தலையை கவ்வி புதரில் இழுத்து சென்றது. மாலதியின்அலறல் சத்தம் கேட்டு வந்த கணவர் பாலகிருஷ்ணன், தனது மனைவியை சிறுத்தை தாக்கிக் கொண்டிருந்ததை கண்டு அங்கிருந்த கற்களை எடுத்து வீசியுள்ளார். இதனால் சிறுத்தை புதரில் ஓடி மறைந்தது. இதன்பின் சிறுத்தை தாக்கியதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த மாலதியை அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், தலையில் பலத்த காயமடைந்தால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து படுகாயமடைந்த மாலதியின் உறவினர் கூறுகையில்:- வால்பாறை சின்கோனா பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ளது. பொதுமக்களை தாக்கி வருவது தொடர்கதையாகவே உள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடமாடும் சிறுத்தையினை கூண்டு வைத்து பிடிக்கும் வனத்துறையினர், அதனை மீண்டும் அதே பகுதியில் விட்டுவிடுவதால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை காணப்படுவதால் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை:
இச்சம்பவம் குறித்து கோவை மாவட்டவன அலுவலர் மாரிமுத்து மற்றும் வால்பாறை காவல் துறை கண்காணிப்பாளர் சுப்ரமணி ஆகியோருடன் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு) வால்பாறை பொதுச்செயலாளர் பரமசிவம் மற்றும்சிம்கோனா பகுதி மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும், மழைக்காலங்களில் மாலை 3 மணிக்கே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பவும், மேலும் புதர்களை உடனடியாக அகற்றவும், சிம்கோனா பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: