திருப்பூர்,
திருப்பூரில் ரூ.1 லட்சம் கோடி பின்னலாடை வர்த்தகம் செய்வதற்கு மோடி உருவாக்கி கொடுத்த கனவை நிறைவேற்ற மத்திய ஜவுளி அமைச்சர் உதவுமாறு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரியுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், பொருளாளர் மோகன் ஆகியோர் வியாழனன்று புதுதில்லியில் மத்திய ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி
இரானியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் திருப்பூர் பின்னலாடைத் தொழில் உயிர் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் செய்து தருமாறு கோரியுள்ளனர்.2020ஆம் ஆண்டில் திருப்பூரின் பின்னலாடை வர்த்தகத்தை ரூ.1லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என்பது பிரதமர் மோடியால் நிர்ணயிக்கப்பட்ட கனவு. ஆனால் கடந்த நிதியாண்டில் திருப்பூரின் வர்த்தகம் ரூ.42ஆயிரம் கோடியாகும். இதில் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் ரூ.26ஆயிரம் கோடியில் இருந்து ரூ.24ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டது. உள்நாட்டு உற்பத்தி ரூ.18 ஆயிரம் கோடியாகும். முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையை சந்தித்ததாலும், டிராபேக் ஊக்கத்தொகை மற்றும் மாநிலலெவியை திரும்பத் தருவதை குறைத்ததாலும் ஏற்றுமதி வளர்ச்சி அடைய முடியாமல் மூச்சுத் திணறி வருகிறது.

இதனால் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டு கிராமப்புற பெண்கள் கடுமையாக பாதிக்கப்பபட்டுள்ளனர். தற்போதைய உலக சந்தையின் அசமத்துவமான நிலையில் நமதுபின்னலாடைத் தொழில் தடம்புரளும் நிலை உள்ளது. நமது அண்டைநாடுகளில் சீனாவின் ஜவுளி உற்பத்தி தொழில் தொடங்கி ஆதாயம் அடைந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடும் பாதிப்பைச் சந்திக்கும். நமது நாட்டுக்கு ஆர்டர்கள் தரும் வர்த்தகர்கள் ஒருமுறை இங்கிருந்து நம் போட்டி நாடுகளுக்குப் போய்விட்டால் அவர்களை உடனடியாக நம் நாட்டுக்குத் திருப்புவது முடியாது. இது மிகப்பெரும் பிரச்சனையாகும். எனவே இதை எதிர்கொள்ள டிராபேக் ஊக்கத் தொகைஉள்ளிட்ட சலுகைகளைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

திருப்பூரின் ஏற்றுமதியை 2020 ஆம் ஆண்டு ரூ.1லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கும்படி மோடி 2014 தேர்தலின் போது கூறியதை இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் புகழ்ந்து தள்ளினர். ஆனால் இப்போது தங்கள் இலக்கை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்பது மட்டுமல்ல, மோடி ஆட்சியில் இப்போது இருக்கும் நிலையும் பறிபோகும் என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டனர். இதை பற்றி வாய் திறக்க மறுக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், மோடியின் வார்த்தைகளை மாற்றிச் சொல்லி ஏய்க்கப் பார்க்கிறது. ஏற்றுமதியுடன், உள்நாட்டு வர்த்தகத்தையும் சேர்த்து ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த மோடி இலக்கு நிர்ணயித்ததாக தங்கள் வார்த்தையை மாற்றிச் சொல்லுகின்றனர். என்னதான் பட்டாலும் மோடி விசுவாசம் புல்லரிக்க வைக்கிறது.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.