ஆம்ஸ்டர்டாம்:
சிஐடியுவின் கனவுத் திட்டத்திற்கு உயர்ந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் சிஐடியு தலைமையில் நிறைவேற்றப்படும் வீடு கட்டும் திட்டத்திற்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்ட டிரான்ஸ் நேசனல் இன்ஸ்டிட்யூட் என்கிற நிறுவனம் வழங்கி வரும் டிரான்ஸ்பர்மேட்டிவ் சிட்டிஸ் விருது இந்த வீடுகட்டும் திட்டத்திற்கு கிடைத்துள்ளது.

ஜுன் 8ஆம் தேதி ஆம்ஸ்டர்டாமில் நடந்த பொது நிகழ்ச்சியில் இவ்விருதுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆசியக் கண்டத்திலிருந்து இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே ஒரு திட்டம் சிஐடியுவின் இந்த வீடு கட்டும் திட்டமாகும். வார்ப்பிட கட்டடங்கள் பிரிவின் கீழ் இந்த விருது கிடைத்துள்ளது. மிக அதிகமான ஆன்லைன் வாக்குகளுடன் விருதுக்கான தகுதியை இத்திட்டம் பெற்றுள்ளது.குடிநீர், மின்சாரம், கட்டுமானம் ஆகியவற்றில் மற்றவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டும் மக்களுக்கான நிறுவனங்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதுமே விருது வழங்கும் நிறுவனத்தின் நோக்கமாகும்.

உலகம் முழுவதுமிருந்து சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களிலிருந்து ஒன்பது மனுக்களை முதல்கட்டமாக தேர்வு செய்தனர். அதில் ஆசியக் கண்டத்திலிருந்து இடம்பெற்றிருந்த ஒரே ஒரு மனு சோலாப்பூரில் சிஐடியு மேற்கொண்டுள்ள வீடு கட்டும் திட்டம் தொடர்பானதாகும்.
சோலாப்பூரில் சிஐடியு நடத்தி வந்த போராட்டங்களின் விளைவாக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் 15 ஆயிரத்து 100 வீடுகள் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. சிஐடியு தலைமை தாங்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இந்த வீடு கட்டும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சோலாப்பூர் பீடித் தொழிலாளிகளான பெண்களே இது வரை கட்டப்பட்ட வீடுகளைப் பெற்றுள்ள பயனாளிகளாவர். மேலும் 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் 2021இல் கட்டி முடிக்கப்பட உள்ளன.

குடிசைப்பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்த ‘பீடித் தொழிலாளிகளுக்கு சொந்த வீடு‘ என்கிற லட்சியத்துடன் 1992இல் சிஐடியு இந்த இயக்கத்தை துவக்கியது. சோலாப்பூர் சிஐடியுவின் நிகரற்ற தலைவரும், சிபிஎம் மகாராஷ்டிர மாநிலச் செயலாளருமான நரசய்யா ஆடம் தலைமையில் நடந்த போராட்டங்கள் இந்த திட்டத்திற்கு உரமூட்டின.

பீடித்தொழிலாளர்களிடமிருந்து அரசு வசூலிக்கும் செஸ் வரித்தொகையைவிட குறைவான தொகையையே அவர்களது நலன்களுக்காக அரசு செலவிடுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதைத் தொடர்ந்து நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு 2001இல் தொழிலாளர்களுக்கு வீடுகட்டும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியது. 2006 செப்டம்பர் முதல் தேதியில் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் 10 ஆயிரம் வீடுகள் கட்டும் முதல்கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்ககால தலைவரான கோதாவரி பாருலேக்கரின் பெயரில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 5ஆயிரத்து 100 வீடுகள் திட்டம் பீடித்தொழிலாளிகளை அணி திரட்டிய கம்யூனிஸ்ட் தலைவர் மீனாட்சி சானெ பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பணி 2015இல் துவக்கப்பட்டது.

சோலாப்பூர் நகரத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்பாரி என்கிற கிராமத்தில் இந்த திட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளும் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. வீடுகளின் விலையில் மூன்றில் ஒரு பகுதி மத்திய அரசும், அதே அளவிலான தொகையை மாநில அரசும் வழங்கி உள்ளன. மீதமுள்ள தொகையை தொழிலாளிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இரண்டு கட்ட வீடு கட்டும் திட்டம் அல்லாது மூன்றாவதாக ஒரு திட்டம் 2018 ஜனவரியில் துவக்கப்பட்டுள்ளது. அது இப்பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக 30 ஆயிரம் வீடுகள் மாபெரும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் படி 2021இல் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.