மேட்டுப்பாளையம்,
நீர்வரத்து குறைந்ததால் பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த ஜூன் 10 ஆம் தேதி
அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான நூறு அடியை எட்டி நிரம்பியது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்வரத்தான வினாடிக்கு 10 ஆயிரம் முதல் 24 ஆயிரம் கன அடி நீர் வரை உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த ஜூன் 10 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளியன்று அதிகாலை முதல் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைய துவங்கியது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்து வருவதால் நீர்வரத்தும் சரிந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்பட்ட அணையின் நான்கு மதகுகளில் இரண்டு மதகுகள் வெள்ளியன்று காலை மூடப்பட்டு அணையின் உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டது. பின்னர் சில மணி நேரங்களில் மீண்டும் திறக்கப்பட்டிருந்த இரண்டு மதகுகளும் மூடப்பட்டு அணையின் நீர் வெளியேற்றம் முழுமையாக நிறுத்தப்பட்டது.

இதனால் பவானி ஆற்றின் வேகமும் ஓரளவு குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்வரத்து வினாடிக்கு ஆறாயிரம் கன அடியாக உள்ளது. இந்த ஆறாயிரம் கன அடி நீர் மட்டும் நீர்மின் உற்பத்திக்காக ஆற்றில் தற்போது திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் தற்போது 96 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பில்லூர் அணை மூடப்பட்டு விட்டதால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

சூழல் சுற்றுலா ரத்து

பில்லூர் அணையின் பின்புறம் உள்ள அதன் நீர்தேக்க பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் வனத்துறை மற்றும் அப்பகுதி பழங்குடியின மக்கள் சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. இயற்கை எழில் மிகுந்த இப்பகுதியில் வாரத்தில் சனி மற்றும் ஞயிற்றுகிழமைகளில் நடத்தப்படும். இந்த சூழல் சுற்றுலாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலரும் ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்து இங்கு வருவது வழக்கம். இயற்கையை நேசிப்பவர்கள் பெரிதும் விரும்பும் இந்த சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் பரிசல் மூலம் இரண்டு மணிநேரம் பயணம் மேற்கொள்ள பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் வனத்திற்குள் நடைப்பயணம், மதிய உணவு, ஆற்றுக்குளியல் என காலை முதல் மாலை வரை நீடிக்கும். இந்த சூழல் சுற்றுலா தற்போது பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பரிசல் பயணம் செல்லும் நீர்தேக்கப்பகுதி தற்போது நீர்வரத்து அதிகரிப்பால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதில் பரிசலில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்பதோடு, சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் பகுதி மற்றும் உணவு அருந்த ஏற்பாடு செய்யப்பட்ட பகுதி என அனைத்தும் நீரில் மூழ்கி விட்டதால் இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறவுள்ள சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.