திருச்சிராப்பள்ளி:
தனது உடல்நலனுக்காக தேகப் பயிற்சி செய்து கொண்டு அதை விளம்பரப்படுத்துகிற பிட்னெஸ் பிரதமர் மோடி, தங்கள் வாழ்வுக்காக போராடியதால் துப்பாக்கிக் குண்டுகளுக்கு 13 உயிர்களை இழந்து கதறுகிற தூத்துக்குடி மக்களுக்காக இன்று வரை வாய்திறக்காதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்விக் கணை தொடுத்தார்.

போராடுவோம் தமிழகமே என்ற முழக்கத்துடன் மோடி – எடப்பாடி அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தி, தமிழகத்தின் ஆறு முனைகளிலிருந்து துவங்கி ஜூன் 8 முதல் 14 வரை தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்ட குழுக்கள், ஜூன் 14 வியாழனன்று திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சங்கமித்தன. செந்தொண்டர் அணிவகுப்புடன் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி எழுச்சிமிகு உரையாற்றினார்.

அவரது உரையின் சாராம்சம் வருமாறு:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சமீபத்தில் சென்று சந்தித்தேன். மருத்துவமனையில் இருந்தவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் சொல்லும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது கூட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடந்ததாகத் தெரியவில்லை. துப்பாக்கியிலிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. சுடப்பட்டு வீழ்ந்த பிறகே இப்படியொரு சம்பவம் நடந்தது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. மிகத் தொலைவில் இருந்து சத்தமே வராமல் குறிப்பிட்ட நபரை குறிபார்த்துச் சுடும் சைலன்சர் ரகத் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர்.

வயிற்றிலும், மார்பிலும், வாயிலும் சுடப்பட்டதிலிருந்தே, துப்பாக்கிச் சூடு கூட்டத்தை கலைப்பதற்கு அல்ல; சுட்டால் உயிர் பலியாகும் என்று தெரிந்தே நடத்தியிருக்கிறார்கள் என்பதை உணர முடியும். உயர்மட்டத்தில் இருப்பவர்களின் அனுமதி இல்லாமல் இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. மத்திய பாஜக ஆட்சி கூட இந்த அனுமதியை வழங்கியிருக்கலாம். இதுகுறித்து ஆழமாக விசாரிக்க வேண்டும். காவல்துறை விதிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை? சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பதவியில் இருக்கும் நீதிபதியின் மூலமாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் பிரதமர் மோடி வாய் திறக்க மறுக்கிறார். அவரின் தேகப்பயிற்சி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறது. நீங்கள் உங்கள் உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களின் உயிரை எடுக்காதீர்கள் என்று தான் சொல்கிறோம்.

வேதாந்தா நிறுவனம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் கட்சிக்கும், தற்பொழுது ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கும் பெருமளவிலான நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து நன்கொடைகளை வாங்கக் கூடாது என விதி இருப்பதால், தற்போது பாஜக ஆட்சியாளர்கள் கொல்லைப்புறமாக சட்ட திருத்தத்தை கொண்டு வந்து கொள்ளையடிக்கிறார்கள்.

பெல் நிறுவனத்துக்கு ஆபத்து
நரேந்திர மோடி அரசு, முதலாளிகளுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டு அவர்களின் நலனை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருச்சி பெல் நிறுவனத்திற்கான ஆர்டர்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ஆலையில் மற்றும் அதையொட்டிய துணை நிறுவனங்களில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்களின் வேலைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடிக்கள் இணைந்து இந்திய நாட்டை கொள்ளையடிக்கின்றனர். பிடிக்க நினைத்தாலும் பறந்து வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர். இவர்களால் பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளின் கடனை ஒரே ஒருமுறைகூட தள்ளுபடி செய்ய முடியாது என்கின்றனர்.
ஒரு சதவிகித பணக்காரர்களிடம் நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் உள்ளன. இதனால் பணக்காரன் மேலும் பணக்காரனாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் உயர்ந்து கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் பணத்திற்கு குறைவு இல்லை. ரூ.11.5 லட்சம் கோடி அளவிற்கு வராக் கடனும் அதற்கான வட்டியும் உள்ளது. இவற்றைக் கொண்டு கல்வி, ஆரோக்கியம், வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

சகுனி மாமா ஆர்எஸ்எஸ்
பாஜக ஆட்சியாளர்கள் கல்வியிலும், பண்பாட்டிலும், அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகின்றனர். கர்ணன் டெஸ்டியூப் பேபியாகப் பிறந்தவன் என்றும், மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் வசதி இருந்ததாகவும் முட்டாள்தனமாக அறிவியலுக்குப் புறம்பாக புராணகால வரலாற்றைப் போதிக்கின்றனர். பாண்டவர்கள் ஐந்து பேரையும் அனைவருக்கும் தெரியும். ஆனால் நூறு கவுரவர்களில் துரியோதனன், துச்சாதனனைத் தவிர வேறு எத்தனை பேரைத் தெரியும். சகுனியால் மகாபாரதத்தில் ஒட்டுமொத்த குருவம்சமும் தொலைந்து விட்டது. தற்பொழுது ஆர்எஸ்எஸ். சகுனி மாமாவாகவும், மோடியும், அமித்ஷாவும் துரியோதன, துச்சாதனர்களாகவும் உள்ளனர்.

ஆளுநர்களின் ராஜ்ஜியம்
தில்லியில் கவர்னர் அலுவலகத்தில் முதல்வரே தர்ணா போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தில்லியிலும், புதுச்சேரியிலும் துணை நிலை ஆளுநர்களின் ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது. பாஜக ஒரு புதிய சூத்திரத்தை கையாண்டு வருகிறது. தான் தோல்வியடையும் மாநிலங்களிலும் ஆட்சி அமைப்பது தான் அது. மணிப்பூர், கோவா, மேகாலயா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இப்படித் தான் அதிகாரத்திற்கு வந்தது. கர்நாடகத்திலும் அதை அமல்படுத்தத் துடித்தது. மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையால் அது முறியடிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் நேர்மையானதா?
தேர்தல் ஆணையத்தின் நேர்மை குறித்த சந்தேகம் வலுத்து வருகிறது. குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு உள்ளிட்ட பல உதாரணங்களைச் சொல்ல முடியும். தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர வரவு- செலவுகளை அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும். பாஜகவின் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான வரவு-செலவில் பொருளாளரின் கையெழுத்து இல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒரு முறைகூட தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பவில்லை.

நீதித்துறையின் மாண்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளே கேள்வி எழுப்பியுள்ளனர். நாடாளுமன்றமும், அதுசார்ந்த நிறுவனங்களும், மாண்புகளும் தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகின்றன.

போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமான மண்
ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமாகவே இதை மீட்டெடுக்க முடியும். மக்களை நலனை மையப்படுத்திய மாற்றுக் கொள்கைகள் அரியணை ஏற வேண்டும். கொள்கை மாற வேண்டுமானால் இந்த மத்திய பாஜக அரசு தூக்கி எறியப்பட வேண்டும். மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து மக்களை அணி திரட்டுவதன் மூலமே இது சாத்தியப்படும். மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் அதன் துதிபாடி அரசும் அகற்றப்பட வேண்டும். தமிழகம் மகத்தான போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமான மண். வர்க்க ஒற்றுமைக்காகவும், சாதியத்திற்கு எதிராகவும் இப்படிப்பட்ட போராட்டங்களை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். ஒரு சிறந்த தமிழகத்தையும் முன்னேற்றமான இந்தியாவையும் உருவாக்குவோம்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.