===என்.குணசேகரன்===       
தற்போது தமிழகத்தில் நகராட்சிகளிலும், பல மாநகராட்சிகளிலும் கடுமையான அளவில் முன்தேதியிட்ட வரி விதிப்பு எனும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. மக்களிடம் உண்மைகள் வெளியிடப்படாமல் வரி நிர்ணயம் செய்யப்பட்டு அவற்றை வசூலிப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. நகர்வாழ் மக்கள் யாரும் வரி விதிப்பதை எதிர்க்கவில்லை. உள்ளாட்சி மன்றங்கள் மக்களுக்கான அதிகார மன்றங்களாக செயல்பட வேண்டும்.அவற்றின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை இருப்பது உள்ளாட்சி ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம்.ஆனால் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் வரி உயர்வில் எவ்வித வெளிப்படைத்ததன்மையும் இல்லை.

11 வருட பாக்கி என்று வதைப்பதா?
வரியை பல மடங்கு உயர்த்தி,11-வருட பாக்கி என்று பல்லாயிரக்கணக்கில் தொகை தீர்மானித்து வரி விதிப்பது என்ன நியாயம்? வரி விதிக்கும் போது பொது மக்கள், குடியிருப்போர் சங்கங்கள், வணிகர்கள் என பல தரப்பினரிடமும் கருத்துக் கேட்பதும் ஆட்சேபணை இருந்தால் விளக்கம் அளிப்பதும்தான் வெளிப்படையான நிர்வாகத்திற்கான அடையாளம். ஆனால் இவை எதுவும் தற்போதைய வரிவிதிப்பில் பின்பற்றப்படவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் சொத்துவரி உயர்த்தப்பட்டதா என்று கேட்கப்பட்டபோது, இல்லை என்று பதில் அளித்துள்ளார். அதே நேரத்தில் குறைவாக வரி விதிக்கப்பட்டவை மற்றும் வரி விதிப்பு விடுபட்டவற்றை தமிழ்நாடு நகராட்சி சட்டம் 1920 பிரிவு 117(A-வின்படி)நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். இதன்படி கண்மூடித்தனமாக வரி உயர்வு அறிவிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. போராட்டம் நடந்த இடங்களில் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் ‘ஜப்தி செய்யப்படும்’ என்ற அறிவிப்புக்கு அஞ்சி, நிர்ணயிக்கப்பட்ட வரியை ஏற்கனவே செலுத்தி விட்டனர். பலர் செலுத்த இயலவில்லை. இந்தக் குளறுபடிகள் அனைத்தும் மாநில அரசாங்கம் மற்றும் நகர நிர்வாகங்களுக்கு நகர்ப்புற வளர்ச்சி பற்றிய உறுதியான, சரியான பார்வை எதுவும் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன.

நகராட்சிகளின் நிதிப் பற்றாக்குறை
அனைத்து நகராட்சிகளிலும் அவர்கள் வருமான ஆதாரத்தைப் பெருக்கிட வரிகளை உயர்த்திக் கொள்ளலாம் என்ற அறிவுறுத்தல் அரசாங்கத் தரப்பில் சொல்லப்படுவதால் பல மடங்கு வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. ஆக, நகராட்சிகளின் நிதிப் பற்றாக்குறை மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

மாநில மொத்த வருவாயிலிருந்து 40 முதல் 50 சதம் அளவில் உள்ளாட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தால்தான் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றும் பணிகளை உள்ளாட்சி மன்றங்கள் மேற்கொள்ள முடியும். இந்தக் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கங்களும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.

2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா மன்றத்தின் “உலக நகர்மய வாய்ப்புக்கள் குறித்த அறிக்கை, “இந்தியாவில் 34 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்வதாக குறிப்பிடுகிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நகரங்களில் வாழ்வோர் எண்ணிக்கை படுவேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சரியான கொள்கைகள்- திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை. இந்த அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமாக குடியிருப்பு,போக்குவரத்து மின் வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு, கல்வி சுகாதாரம் போன்றவை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டுமென்ற பார்வை ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஆனால் இந்த நகரமய வளர்ச்சியை முதலாளித்துவ சக்திகள் பலன் அடைவதற்கு ஏற்ற வகையில் கொள்கைகளை கடைப்பிடிப்பதும், அடுக்கடுக்காக புதிய அறிவிப்புக்களை வெளியிடுவதும் நிகழ்ந்து வருகிறது. மக்களின் தேவைகளுக்கு மக்களிடமே வசூல் செய்வது என்பதான் அவர்களது நகர்மயப் பார்வை.

நகராட்சி வருமான ஆதாரங்கள்

மக்களிடமிருந்து பெறப்படும் சொத்து வரி என்பதே நகராட்சி, மாநகராட்சிகளுக்கான வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாக தற்போது இருக்கிறது. இதர வருமான ஆதாரமான மாநில அரசாங்க நிதி ஒதுக்கீடு, அரசு மானியங்கள், அரசுக்கடன்கள் போன்றவை அனைத்தும் இரண்டாம் பட்சமாகவே இருந்து வருகின்றன.

இந்தியாவின் நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களை ஆராய்ந்த ஐ.நா மன்றத்தின் வளர்ச்சித் திட்ட அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “நகர உள்ளாட்சி மன்றங்கள் நிதிப் பங்கீட்டில் உள்ள குறைபாட்டினால் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. நகர உள்ளாட்சி மன்றங்கள் நிதிக்காக மாநில அரசாங்கங்களின் அரசியல் மற்றும் அதிகார வர்க்க செல்வாக்கு வட்டாரங்களிடம் கெஞ்சுகிற நிலை உள்ளது.” இந்த அந்த அறிக்கை உலகின் பல நகரங்களுக்கு அரசு ஒதுக்கும் தொகையை விட மிகக் குறைவாகவே இந்தியாவில் நிதி ஒதுக்கீடு உள்ளது என்ற உண்மையையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது.

மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், வாழ்வாதாரம் பாதுகாக்கவும் மக்களிடமே கட்டண வசூல், வரிக் கொள்ளையை நடத்துவது என்கிற அணுகுமுறைதான் மத்திய, மாநில அரசுகளிடம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் வரி விதிக்கும் பல நடைமுறைகள் இருந்து வருகின்றன. சுமார் 10 வகைகளில் வரிகள், கட்டணங்கள் வசூல் கொள்ளை நடந்து வருகிறது. எனவே இந்த வரி விதிப்பு முறையில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர நகர்ப்புற மக்கள் இயக்கம் வலுப்பெற்றிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் குரல்
தமிழகத்தில் தீவிரமடையும் இப்பிரச்சனை தொடர்பாக இந்த ஆண்டின் மார்ச் மாதத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றியது:

“மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு புதிய வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள், சிறு கடைகள், குடிசைத் தொழிலாக வீடுகளிலேயே நடைபெற்ற சிறு குறு தொழில் மையங்கள் இவைகளுக்கு ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு என்று பாகுபாடு இல்லாமல் ஒரே விகிதமாக இருந்ததை தற்போது பிரித்து ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு என தனித்தனியாக வரி விகிதம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கட்டிடங்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் மனம் போனபடி வரி விகிதத்தை 5 மடங்கு முதல் 25 மடங்கு வரை தீர்மானித்துள்ளன. இத்தனை மடங்கு வரி உயர்வு என்பது ஏற்புடையதல்ல.

இந்த சொத்துவரி அறிவிப்பு மட்டுமல்லாது, தற்போது 500 ரூபாய் வரை சொத்துவரி கட்டுபவர்களுக்கு ஆண்டுக்கு 120 ரூபாய் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் என்று தீர்மானிப்பது அடுத்தடுத்த அடுக்காக 240 ரூபாய், 360 ரூபாய், 500 ரூபாய் என சொத்துவரி உயர உயர குப்பைக்கான கட்டணமும் உயரும் என்றால் இது எந்த அறநெறிகளுக்கும் உட்பட்டதாக தெரியவில்லை.

ஏற்கனவே மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, தொழில் நெருக்கடி, விலைவாசி உயர்வு காரணமாக திண்டாடிக் கொண்டு இருக்கும் அனைத்து பிரிவு பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர், சிறு வணிகம் செய்வோர் கடும் பாதிப்பை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாநில அரசு சொத்துவரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் என உயர்த்தி அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.”

இந்த தீர்மானத்தின் வழியாக, வரி விதிப்பை மாநில அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியது. இதற்காக முதல் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சி. ஆனால் தமிழக அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை.

ஜூன் 28: மனு அளிக்கும் மக்கள் இயக்கம்

நகராட்சி, மாநகராட்சி நிர்வாகச் செயல்பாட்டில் மக்களின் ஜனநாயகப் பங்கேற்பை ஆட்சியாளர்கள் சிறிது சிறிதாக அழித்து வந்துள்ளனர். மக்களிடம் இருந்து வசூலிக்கும் தொகையை நிர்ணயிப்பதில் ஆட்சியாளர்களும் உயர்மட்ட அதிகார வர்க்கமும் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கிற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல. நகரங்கள் உழைக்கும் மக்களுக்குச் சொந்தமில்லை; வசதி மிகுந்த மேட்டுக்குடியினருக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப குவியலுக்கும்தான் எனும் நிலையை உருவாக்குவதற்கான முயற்சியும் ஆகும். இதனைத் தடுப்பது ஜனநாயக சக்திகள் அனைவரின் கடமை.

இந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் ஜூன் 28 மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அனைத்து நகராட்சிகள்,மாநகராட்சிகளில் மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி முன்முயற்சி எடுத்து நடத்தும் “மனு அளிக்கும் மக்கள் இயக்கம்” நடைபெறும். வரி உயர்வினை முற்றாக கைவிட விடுமென்றும் வரி விதிப்பில் வெளிப்படைத்தன்மை தேவை என்பதும் முக்கிய கோரிக்கைகள்.

அத்துடன் தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் நீராதாரங்கள், வட்டார நீர்நிலைகள் அனைத்தையும் மேம்படுத்தி, தொடர்ந்து நீடித்து வரும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கை.

இடதுசாரி சக்திகள் அல்லாத மற்ற கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் தங்களது வர்க்கத் தேவைகளுக்கு மட்டுமே நகரமய வளர்ச்சியை பயன்படுத்த முயல்கின்றனர். கார்ப்பரேட், முதலாளித்துவ சக்திகளின் மூலதனத் தேவைக்காகவே அவர்களது கொள்கை வழி அமைந்துள்ளது.

மாறாக உழைக்கும் வர்க்க நலன் என்ற அழுத்தமான தளத்தில் நின்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரி இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மாற்றுப் பார்வையுடன் மக்களைத் திரட்டுவது இடதுசாரிகளின் அரசியல் மற்றும் அமைப்பு தளங்களாக நகரங்கள் மாறிட வழிவகுக்கும்.

கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

Leave A Reply

%d bloggers like this: