ராஞ்சி :

அதானி குழுமத்தில் செயல்படும் ஒரு நிறுவனமான அதானி பவர் லிமிடெட் ஜார்க்கண்ட் மாநிலம் கோடா என்ற இடத்தில் 1600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவிலான அனல் மின் நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. மேலும், இந்த அனல்மின் நிலையத்தின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதையும் வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 1214 ஏக்கர் நிலங்கள் தேவை இருப்பதாகவும், அதனுடன் 74 ஏக்கர் நிலம் நிலக்கரி எடுத்துவரும் இரயில்களுக்கு பாதை அமைப்பதற்காக தேவைப்படுவதாகவும் அதானி குழுமத்தின் சமூக தாக்க மதிப்பீட்டு குழு அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 25% வழங்குவதாக கூறப்பட்ட மின்சாரம் மற்றுமொரு திட்டத்திலிருந்து வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் முழுமையான விவரங்களும் இன்னும் தெரிவிக்கப்படாமல் உள்ளன. மேலும், கடந்த 2016ல் மாற்றப்பட்ட சட்ட மசோதா தனியார் நிறுவனங்கள் வழங்கும் 25% மின்சாரத்திற்கு மக்களுக்கு வழங்கும் மின்சாரத்தின் விலையை விட அதிக விலை வாங்க வழிவகுத்து தந்துள்ளது. இதனால் ஜார்க்கண்ட் அரசு அடுத்த 25 வருடத்தில் 7410 கோடி ரூபாயை இழக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Scroll.in என்ற செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி அம்மாநில அரசு அதானி குழுமத்தின் நிறுவனத்தின் சார்பாக விவசாயிகளை வற்புறுத்தி நிலங்களை வாங்குவதாக கண்டறிந்துள்ளது. இவ்வாறு இதுவரை வாங்கப்பட்ட 174.84 ஏக்கர் நிலமும் ”பொது நோக்கம்” என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ளன. கடந்த 2013 கொண்டு வரப்பட்ட அம்மாநில சட்டத்தின்படி ”பொது நோக்கம்” என்ற பெயரில் வாங்கும் நிலத்திற்கு 80% நில உரிமையாளர்களின் சம்மதம் நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பே பெறப்பட வேண்டும் என்ற சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை.

இதுவரை நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 10 கிராமங்களை சேர்ந்த 841 குடும்பங்களைச் சேர்ந்த 5000க்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக ஜார்கண்ட் அரசு ஏழை மக்களின் விவசாய நிலங்களை அபகரித்து கொண்டிருப்பதை எவ்வாறு பொதுநோக்கம் என்று கூறுவது? என மத்திய ஆராய்ச்சி நிறுவனர் கஞ்சி கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.