உதகை,
உதகை அருகே அரசு பேருந்துபள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், பலியானோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா செயலாளர் எல்.சங்கரலிங்கம், தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உதகை – குன்னூர் பிரதான சாலையில் மந்தாடா அருகில் கடந்த வியாழனன்று அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நடத்துனர் மற்றும் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து உதகை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர்.

தமிழக அரசும், அரசு போக்குவரத்து கழக நிர்வாகமும் தரமான பேருந்துகளை நீலகிரி மாவட்டத்தில் இயக்காததே இந்த விபத்திற்கு காரணமென்று கூறப்படுகிறது. முன்னதாக, தரமான பேருந்துகளை இயக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியு சங்கமும் இணைந்து போக்குவரத்து நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, நீலகிரி மாவட்டம்மலை மாவட்டம் என்பதால், இந்த மாவட்டத்தில் தரமான பேருந்துகளை இயக்கி, இதுபோன்ற விபத்துகள் மேலும் நிகழாதவாறு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இழப்பீடு தொகை போதாது. குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதேபோல், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா குழுவின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: