உடுமலை,
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் திங்களன்று (ஜூன் 18) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2018-2019 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்ட வகுப்புகள் தமிழ் இலக்கியம் ( எண்ணிக்கை 40), ஆங்கில இலக்கியம் ( 20), பொருளியல் (20), வணிகவியல் (40), இயற்பியல் (30), வேதியியல் (20), கணினி அறிவியல் (40), கணிதம் (20), புள்ளியியல் (15), சுற்றுலாவியல் (20) ஆகிய பாடப்பிரிவுகள் கல்லூரியில் செயல்பட்டு வருகின்றன. முதுநிலை பட்ட வகுப்புகளில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிற முதுநிலை சுற்றுலாவியல் பட்டப் படிப்பில் சேர ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டத்தை ஆங்கில வழியில் பயின்று தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இளநிலை பட்ட வகுப்பில் இரண்டாண்டுகள் தமிழ், ஆங்கிலம் பயின்றவர்கள் முதுநிலை ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய வகுப்பில் சேரத் தகுதி உடையவர்கள்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் அனைத்து பருவங்களின் மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள், இணையதளம் மூலம் பெறப்பட்ட இறுதி பருவத் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். நகல்கள் அனைத்திலும் அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் ரூ.60 செலுத்தி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.