கோவை,
வணிக சிலிண்டரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனசமையல் எரிவாயு குறைதீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராணி தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இதில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி வினோத் மற்றும் எண்ணெய் நிறுவன விநியோகிஸ்தர்கள், நுகர்கோர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, கோவையில் எடை குறைவான சிலிண்டர்கள் விற்பனை செய்வதாகவும், இதனால் வீட்டு சிலிண்டர்கள் மிகக்குறைந்த நாட்களே பயன்படுத்த முடிகிறது. எனவே விநியோக ஊழியர்கள் எடையளவு கருவிகள் எடுத்து வரவேண்டு என நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கிராமப்புறங்களில் சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யாமல், குடோனுக்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறு கூறி பொதுமக்களை அலைகழிக்கின்றனர். இதேபோல் மானிய தொகை வங்கி கணக்கில் சேர்வதில்லை. விபத்து ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் எவ்வளவு தொகை இழப்பீடாக கிடைக்கும் என்றும் தெரிவிப்பதில்லை என குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், சிலிண்டர் எடைகுறைவாக இருப்பதாக தெரிந்தால் 1906 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். விபத்திற்கு தகுந்தவாறு இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இது குறித்ததகவல்கள் வரும் காலங்களில் அனைத்து பில்களிலும் அச்சிடப்படும். மேலும் வணிக சிலிண்டர்களை வீட்டு சிலிண்டராக மாற்றியும், வாடகை கார்களுக்கு மோட்டார் இயந்திரம் மூலம் வணிக சிலிண்டர்களை பயன்படுத்துவாக புகார்கள் வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் வீட்டு சிலிண்டர் ரத்து செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Leave A Reply