ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் கோதா மாவட்டத்தில், மாட்டு வியாபாரம் செய்து வந்த இஸ்லாமியர்கள் 2 பேரை ‘பசு குண்டர்கள்’ கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீதும் பாஜக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கோதா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிராபுதீன் அன்சாரி (35) மற்றும் முர்தாஸ் அன்சாரி (30). மாடுகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்வது இவர்களின் தொழில். அந்த வகையில், 13 எருமை மாடுகளை வாங்கி, வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிராபுதீன், முர்தாஸ் உட்பட 5 பேர் வாகனத்தில் இருந்துள்ளனர்.இந்நிலையில், பன்கட்டி கிராமம் அருகே, இவர்களின் வாகனத்தை மறித்த ‘பசு குண்டர்கள்’, அதிலிருந்த 5 பேரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். குறிப்பாக, சிராபுதீன் அன்சாரி மற்றும் முர்தாஸ் அன்சாரி ஆகிய 2 இஸ்லாமிய இளைஞர்களையும் கடுமையாகத் தாக்கியதுடன், கயிற்றில் கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்று அடித்தே கொலை செய்துள்ளனர்.
ரம்ஜான் கொண்டாட உள்ள நிலையில், இச்சம்பவம் ஜார்க்கண்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல கடந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதியன்றும் வேனில் மாட்டுக் கறி கொண்டு சென்றதாகக் கூறி அலீமுதீன் அன்சாரி என்பவரை பசு குண்டர்கள் அடித்துக் கொலை செய்தனர். இந்த வழக்கில் 11 பேருக்கு அண்மையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.இந்நிலையில், தற்போது மீண்டும் ஜார்க்கண்டில் 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கொலைகாரர்களை தப்பவிடும் முயற்சியில் இறங்கியுள்ள ஜார்க்கண்ட் அரசு, இங்குள்ள துல்லு கிராமத்தில் 2 நாட்களுக்கு முன் 13 பசு மற்றும் எருமை மாடுகள் திருடு போனதாகவும், இதில் ஆத்திரம் அடைந்த ‘பொதுமக்கள்தான்’ இஸ்லாமியர்கள் 2 பேரை அடித்துக் கொன்று விட்டார்கள் என்றும் கதையை மாற்ற முயன்றுள்ளது.அதற்கேற்பவே, தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாமியர்கள் மீதும் எருமை மாடுகளைத் திருடியதாக பாஜக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.