சேலம்,
மத்திய மோடி அரசு கூறும் மக்கள் விரோத திட்டங்களுக்காக, தமிழக மக்களை எடப்பாடி பழனிச்சாமி அரசு காவு வாங்கி வருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கத்தில் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

விண்ணைத்தொடும் விலைவாசி, வேலையின்மை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராடுவோம் தமிழகம் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தில் ஆறு முனைகளில் இருந்து பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன. இதன்ஒருபகுதியாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் வியாழனன்று சேலம் மாவட்டம் ஆத்தூர், விரகனூர் பகுதிகளுக்கு வருகை புரிந்த பிரச்சார குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டடது.வீரகனூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு பேரூர் நகர செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் சிறப்புரையாற்றி பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. குறிப்பாக, சேலம் – சென்னை எட்டு வழி சாலை என்ற பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு விவசாயக் குடும்பங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனமான ஜிண்டாலுக்கு துணைபோகும் வகையில் உள்ளது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அதிகரிக்க எந்த முறையான திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி அரசு செய்வதில்லை. மாறாக, மத்திய மோடி அரசு கூறும் மக்கள் விரோத திட்டங்களுக்கு தமிழக அரசு மக்களை காவு வாங்கி வருகிறது. இதனால் சிறு, குறு தொழில் முனைவோர்கள் பாதிப்படைந்து தொழில்கள் நசுக்கப்
பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் சிறப்புரையாற்றினார். மேலும், இந்த பிரச்சார நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், எஸ்.கண்ணன், பி.சுகந்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, வி.கே.வெங்கடாச்சலம், எம்.குணசேகரன், முருகேசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.