ஷில்லாங்:
டிஜிபி ஸ்வராஜ் சிங்-கின் கடும் எதிர்ப்பு காரணமாக, மேகாலயா பாதுகாப்பு ஆலோசகராக குல்பீர் கிருஷணை நியமிக்கும் முடிவிலிருந்து அம்மாநில அரசு பின்வாங்கியுள்ளது.
இது பாஜக-வுக்கு அவமானமாக மாறியிருக்கிறது.

குல்பீர்

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையில்- பாஜகவும் பங்கு பெற்றுள்ள கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, பாஜக தனக்கு வேண்டியவர்களை அரசின் முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறது.

அந்த வகையில், மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் காவல் துறை அதிகாரி குல்பீர் கிருஷனை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தது. முதல்வர் கான்ராட் சங்மா-வும் அதனை ஏற்றுக் கொண்டார். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.ஆனால், எதிர்பாராத விதமாக, குல்பீர் நியமனத்திற்கு, மேகாலயா டிஜிபி ஸ்வராஜ் பிர் சிங்கிடமிருந்து கடும் எதிர்ப்பைக் கிளம்பியது. குல்பீருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்த அவர், கடந்த ஜூன் 11ஆம் தேதி தனது டிஜிபி பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கும் சென்றார்.

சாகித்ய அகாடமி விருது பெற்றபொழுது

இது, மேகாலய அரசுக்கு சிக்கலைக் கொண்டு வந்தது. ஸ்வராஜ் சிங், கடந்த ஏப்ரல் மாதமே ஓய்வு பெறுவதாக இருந்தவர். ஆனால், ஸ்வராஜ் சிங் பணிக்காலத்தை அரசு தானாகவே நீட்டித்தது.இதற்குக் காரணம், 2016-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் டிஜிபி-யாக இருக்கும் ஸ்வராஜ் சிங், திறமையான அதிகாரி என்று மக்கள் மத்தியில் பெயரெடுத்தவர். சக காவல்துறையினரும், ஸ்வராஜ் சிங் மீது நல்ல மதிப்பையும் மரியாதையையும் வைத்திருந்தனர். காவல்துறை பணியைத் தாண்டி, ஸ்வராஜ் ஒரு இலக்கியவாதி, சிறந்த கவிஞரான அவர், சாகித்ய அகாடமி விருதையும் வென்றவர்.

இந்நிலையில், பாஜக பரிந்துரை செய்த குல்பீர் கிருஷனை பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தால், தான், பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று டிஜிபி ஸ்வராஜ் சிங் அறிவித்தது, மேகாலயா அரசுக்கு தர்மசங்கடமானது. குல்பீர் நியமனத்திற்கு, மேகாலயா காவல்துறையினரும் ஒத்துழைப்பதாக இல்லை.

இவையெல்லாம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக மாற, குல்பீர் கிருஷனை நியமனத்தையே தற்போது மேகாலயா அரசு தள்ளி வைத்துள்ளது.பாஜக பரிந்துரைத்ததாக கூறப்படும் குல்பீர் கிருஷன், சர்ச்சை பேர்வழி. 2000-ஆம் ஆண்டில் அவரது தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக மத்திய உளவுத்துறையிலிருந்து வெளியேற்றப்பட்டவர். 2013 சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, தேர்தல் ஆணையம் இவரை மேகாலய மாநில டிஜிபி பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்தும் நடவடிக்கை எடுத்தது. அப்படிப்பட்டவரைத்தான் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று கூறி பாஜக தற்போது மூக்குடைபட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.