திருப்பூர்,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. கோவை, நீலகிரி, திருப்பூரிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கில் கழிவு நீரும் கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள நல்லம்மாள் தடுப்பணை, ராயபுரம் தடுப்பணை, அணைக்காடு மண்ணரை தடுப்பணை, காசிபாளையம் தடுப்பணை ஆகிய தடுப்பணைகள் நிரம்பி வழிந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆனைமேடு, ஆலங்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப் பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.