கோவை,
கோவையில் போலியாக அரசு சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வருவது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், சூலூர் தாலுகாவை சுற்றிலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன.இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் அவசரதேவைக்காக சொத்து ஆவணங்களை கொண்டு, வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி புரோக்கர்கள் சிலர், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு தேவைப்படும் சான்றிதழ்களை தாங்களே அரசு அதிகாரிகளிடமிருந்து பெற்றுத் தருவதாகவும் கூறி ஒரு குறிப்பிட்ட தொகை வசூலித்து வருகின்றனர்.

இதன்படி கிராம நிர்வாக அலுவலரிடம் சொத்து உரிமைச் சான்று பெறவும், தாலுகா அலுலகத்தில் வாட்டாட்சியரிடம் தடையில்லா சான்று பெறவும் பல ஆயிரம் ரூபாய்களை கமிஷனாக பெற்று வந்துள்ளனர். அதன்பின் சொத்துரிமைச் சான்று, தடையின்மை சான்று ஆகியவற்றை சொத்து ஆவணங்களுடன் இணைத்து வங்கியில் கடன் பெற மனு செய்கின்றனர். இதேபோன்று சொத்துக்கான பட்டாவை ஆதாரமாகக் கொண்டு செய்யப்படும் பத்திர பதிவுக்கு சொத்துரிமைச் சான்று தேவைப்படுகிறது. இந்த சான்றுகளையும் புரோக்கர்கள் பெற்று ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்கி வருவதாகவும் அதன் அடிப்படையில் சொத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு, தமிழக அரசின் தலைமை செயலர், மாநில ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு புகார்கள் சென்றுள்ளன. சூலூர் பகுதியில் உலவும் இந்த போலி சான்றுகளில் அச்சு அசலாக தாலுகா அலுவலக முத்திரை உள்ளது. ஆனால் வாட்டாட்சியர் கையெழுத்து மட்டும் மாறியுள்ளது. சான்று வழங்கப்பட்ட தேதியில் பணியில் இந்த வாட்டாட்சியர் யார், அவர் பெயர் என்ன என்பது தெரிந்தவர்கள் மட்டுமே அதுஅசலா அல்லது போலியா என கண்டுபிடிக்க முடியும். இந்த சான்றுகள் தேவைக்கு ஏற்ற வகையில் ரூ. 500 முதல் ஆயிரம் வரை விலைவைக்கப்படுகிறது.

இதுகுறித்து சூலூர் வாட்டாட்சியர் ஜெகதீசன் கூறியதாவது: இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சான்றிதழ்கள் போலி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை யார் தயாரித்து விற்கிறார்கள் என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது. மேலும்,போலி சான்றுகள் புழக்கத்தில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய கிராம நிர்வாகஅலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம், சான்றிதழ் தேவைப்படுவோர் நேரடியாக தாலுகா அலுவலகத்திற்கு வர வேண்டும். உரிய விசாரணைக்கு பின் அலுவலகத்தில் மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும். ஆகவே, அறிமுகமில்லாத நபர்கள், புரோக்கர்கள் சான்றிதழ்கள் வாங்கி தருவதாக கூறினால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவர் கூறினார்

Leave a Reply

You must be logged in to post a comment.