நாமக்கல்,
கொல்லிமலை, போதமலை உள்ளிட்ட பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு இதுவரை எத்தனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது என சிபிஎம் பிரச்சார இயக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராடுவோம் தமிழகமே என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் 6 முனைகளிலிருந்தும் பிரச்சார இயக்கம் கடந்த ஒருவார காலமாக நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக புதனன்று மாலை நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பகுதி முள்ளுக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சின்னுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி துவக்க உரையாற்றினர். இதைத்தொடர்ந்து பிரச்சார பயணக்குழுவின் தலைவரும், மாநிலசெயற்குழு உறுப்பினருமான பி.சண்முகம் சிறப்புரையாற்றுகையில், மோடி அரசின் தவறான திட்டங்களால் தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேலாக சிறு, குறுதொழில்முனைவோர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோல் தினந்தோறும் உயரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் அத்தியாவசியபொருட்களின் விலைகளும் உயர்ந்து பொதுமக்கள் பெரும் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், காடு மக்களுக்கு சொந்தம் என வன உரிமை சட்டம் சொல்கிறது. இத்தகைய வன உரிமை சட்டம் கொண்டு வந்து பலவருடங்களாகியும், அதனை அமல்படுத்தாமல் ஆளும் அரசுகள் கிடப்பில் போட்டுள்ளன. அதனை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனாலும் அரசு தன் கடமையை செய்ய மறுக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, போதமலை உள்ளிட்ட பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு நடைமுறையில் உள்ள பட்டா வழங்கும் சட்டத்தினை பயன்படுத்தி இது
வரை எத்தனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள கண்காணிப்பு குழு எத்தனை முறை கூட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மாதம் ஒரு முறை கூட்டத்தினை கூட்டி ஆலோசனை செய்திருந்தால் கூட இத்தனை ஆண்டுகளில் பல ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கி இருக்கலாம். ஆனால், இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் மெத்தனம் காட்டி வருவதாக பெ.சண்முகம் குற்றம்சாட்டினார்.

மேலும், மாநிலக் குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், எஸ்.கண்ணன், ஜி.ஆனந்தன், சுகந்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்டெல்லிபாபு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, பி.பெருமாள், எம்.அசோகன், ஏ.டி.கண்ணன், சு.சுரேஸ் ஆகியோர் உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.