கோவை,
கோவை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ராஜவாய்க்காலில் இருந்து வெளியேறிய மழைநீர் செல்வபுரம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால்பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகின்றது. நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரானது ராஜவாய்க்கால் வழியாக உக்கடம் பெரியகுளத்திற்கு செல்லும் நிலையில், புதனன்று ராஜவாய்க்காலில் இருந்து வெளியேறிய மழைநீர் செல்வபுரம் பகுதியில் உள்ள சாரோஜினி நகர் பகுதியில் புகுந்தது. மேலும், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. மேலும், குடிநீர் தொட்டிகளிலும் சாக்கடை நீர் கலப்பதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தண்ணீரில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களும் அடித்துக்கொண்டு வருவதால் அச்சத்துடனேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒவ்வொரு முறையும் மழை காலத்தில் இதுபோன்று தண்ணீர் வீடுகளுக்குள் வருவது தொடர் கதையாகி வருகிறது. குடியிருப்பு பகுதியை ஓட்டி செல்லும் ராஜவாய்க்கால் பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்தால் தண்ணீர் வீடுகளுக்குள் வருவது தடுக்கப்படும். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், தற்போது தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் கற்றுவதற்கான நடவடிக்கைகளாவது மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.