பெங்களூரு:
கவுரி லங்கேஷ் படுகொலையில், இந்துத்துவா அமைப்பான ஸ்ரீராம் சேனாவுக்கு இருக்கும் தொடர்பு அம்பலமாகியுள்ளது. கொலையாளி என்று கூறப்படும் பரசுராம், சேனாவின் தலைவர் முத்தலிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

முற்போக்குச் சிந்தனையாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, பெங்களூருவிலுள்ள அவரது வீட்டு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் உட்பட நாட்டின் பல்வேறு தரப்பினரை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கண்டனங்களும் எழுந்தன.இதையடுத்து, கொலை குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. இந்த குழுவினர் நீண்ட தேடுதலுக்குப் பிறகு அண்மையில் சிலரைக் கைது செய்தது. அவர்களில் பரசுராம் வாக்மேர் என்ற 26 வயது இளைஞரும் ஒருவர். இவர் ஸ்ரீராம் சேனா என்ற இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் என்ற செய்திகள் வெளியாகின. தாங்கள் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்த ஸ்ரீராம் சேனா, பரசுராம் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று வேகவேகமாக மறுத்தது.

ஆனால், கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டவர் என்று கூறப்படும் பரசுராம், ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக்குடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது இந்துத்துவா கூட்டத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், கவுரி கொலையில் ஸ்ரீராம் சேனாவுக்கு இருக்கும் தொடர்பையும் அம்பலப்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.