நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, நம் தமிழகம் தமிழ்நாடு எனப்பெயர் சூட்டப்பட்டு 50 ஆவது ஆண்டில் காலடிஎடுத்து வைப்பதை முன்னிட்டு பொன்விழா ஆண்டாக மாநிலம் முழுவதும் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையால் வருகிற ஜூன் 25 ஆம் தேதியன்று முற்பகல் 10 மணியளவில் மோகனூர் சாலை நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளன.இந்த போட்டிக்கான தலைப்புகள் மொழியின் பெருமையை எடுத்துரைக்க அண்ணா, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.கல்யாணசுந்தரனார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரின் படைப்புகளை மையமாகக் கொண்டு அறிவிக்கப் பெறும். மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் முதல் பரிசு பெறுவோர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதிபெறுவர்.

எனவே, இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உரிய நாட்களில் கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அவர்களிடமோ அல்லது போட்டி நடைபெறும் நாளன்று நேரிலோ விண்ணப்பித்து போட்டியில் கலந்துகொள்ளலாம். இதுகுறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் 04286 281264, 94459 82856, 99522 62167 என்றஎண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: