திருப்பூர்,
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் இஎஸ்ஐ சந்தாதாரர்களாக 2 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இங்குள்ள இரண்டு இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தலா ஒரு மருத்துவர் வீதம் மொத்தம் இரண்டே மருத்துவர்கள்தான் உள்ளனர்.  தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கும், இங்கிருந்து இஎஸ்ஐக்கு வழங்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் சந்தா தொகைக்கும் ஏற்ப இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதுடன், மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து அனைத்து சிகிச்சைகளும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

திருப்பூர் நகரில் பின்னலாடைத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலானோருக்கு இஎஸ்ஐ., பி.எப்., போன்ற அடிப்படை சட்ட சலுகைகள் வழங்கப்படுவதில்லை. எனினும் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டும் முறைப்படி இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதேசமயம் சட்டப்படி கட்டாயம் என்பதால் பெரும்பாலான கம்பெனிகளில் இஎஸ்ஐ., பி.எப்., வசதிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு பதிவு செய்து பணப்பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூரில் மட்டும் 2 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., சந்தாதாரர்களாக உள்ளனர். ஆனால், இவர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவ வசதியோ கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக உள்ளது. பல ஆண்டு காலமாக திருப்பூரில் ஓடக்காடு மற்றும் கொங்கு மெயின் ரோடு ஆகிய இரு பகுதிகளில் மட்டும் இரு இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் படுக்கை வசதியோ, இதர பரிசோதனை, அறுவை சிகிச்சை செய்வது உள்ளிட்ட வசதிகளோ கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த மருத்துவமனைகளில் தலா 4 மருத்துவர்கள் வீதம் மொத்தம் 8 மருத்துவர்கள் பணியாற்றினர். ஆனால் இப்போது இரு இடங்களிலும் தலா ஒருவர் வீதம் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.

இது பற்றி இஎஸ்ஐ வட்டாத்தினரிடம் கேட்டால், இஎஸ்ஐ கழகம் மருத்துவர்கள் நியமிப்தற்கு உரிய தொகையை மாநில அரசுக்கு வழங்கி விடுகிறது. ஆனால் மாநில அரசுதான் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் கண்டுகொள்ளாதபோது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். எனவே மாநில அரசு உடனடியாக இந்த மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மொழி தெரியாத அதிகாரி:
இது தவிர இரு இஎஸ்ஐ கிளை அலுவலகங்கள் இங்கு இருந்தும் உரிய அலுவலர்கள் இல்லாத நிலை தொடர்கிறது. இரு அலுவலகங்களுக்கும் சேர்த்து ஒரேயொரு மேலாளர் இருக்கிறார். அவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர், தமிழ் மொழி தெரியாது என்ற நிலையில் தொழிலாளர்கள் இஎஸ்ஐ தொடர்பான தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இருக்கக்கூடிய ஒரு தொழில் நகரத்தில் தமிழ் மொழி தெரியாத ஒருவரை அதிகாரியாக நியமித்தால் நாங்கள் எப்படி பயனடைய முடியும் என்று தொழிலாளர்கள் கேட்கின்றனர். குறைந்தபட்சம் இங்கு வரும் அதிகாரிகள் தமிழ் மொழி தொடர்பாளர் மூலமாவது தொழிலாளர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் எந்த பணியும் நடைபெறுவதில்லை என்றும் கூறுகின்றனர்.

பலனளிக்காத திட்டங்கள்:
இது போதாதென்று தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதியில் பல திட்டங்கள் உள்ளன. இஎஸ்ஐ மூலம் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெறும் வசதி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிக்சை பெற்றுக் கொண்டு அங்கு செலவு செய்த பணத்தை இஎஸ்ஐ மூலம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இப்போது அதிலும் திருப்பூர் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் கிடைப்பதில்லை.

திருப்பூர் மருத்துவமனைகளில் இருந்து உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டால் கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம். எனவே பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது இல்லை. அத்துடன் வேறு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற்றுக் கொண்டால் சிகிச்சை பணத்தை இஎஸ்ஐ மூலம் பெற்றுக் கொள்ளும் திட்டமும் தற்போது சுணக்கம் அடைந்துள்ளது.  குறிப்பாக சந்திரசேகர் என்ற தொழிலாளி தனது தந்தையை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார். அதன் பிறகு பல மாதங்கள் ஆகியும் சிகிச்சைக்கு செலவிட்ட தொகையை இஎஸ்ஐ நிறுவனம் இதுவரை வழங்கவில்லை. அதேப் போல் பூங்கொடி என்ற பெண் தொழிலாளி விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கும் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இஎஸ்ஐ சிகிச்சைக்கு செலவிட்ட பணத்தை வழங்கவில்லை. ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் வர வேண்டியுள்ளது. இதுபோல் ஏராளமான தொழிலாளர்களுக்கு சிகிச்சைக்கு செலவிட்ட பணத்தை இஎஸ்ஐ நிர்வாகம் விடுவிக்காமல் உள்ளது.

இதுபோல் எண்ணற்ற பிரச்சனைகள் காரணமாக கணிசமான தொழிலாளர்கள் இஎஸ்ஐ மருத்துவ வசதியை பயன்படுத்த விரும்பாத நிலை உருவாகியுள்ளது. அதேசமயம் இன்றைய சூழலில் மருத்துவச் செலவு என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகப்பெரும் சுமையாக அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இஎஸ்ஐ மருத்துவ வசதியை பெருமளவு தொழிலாளர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். குறிப்பாக, திருப்பூரில் நூறுபடுக்கை வசதிகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதாக அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 15 ஆண்டு காலம் ஆகப் போகிறது. ஆனால் இன்றுவரை இதில் முன்னேற்றம் இல்லை. தொலைநோக்கு அடிப்படையில் திருப்பூரில் தொழிலாளர்கள் பலனடைய இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதுடன், தற்போதுள்ள இரு சிறிய மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் நியமித்து உரிய சிகிச்சை பெறவும் வசதி செய்து தர வேண்டும் என்றும் தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் கூறுகின்றனர்.

– வே.தூயவன்

Leave a Reply

You must be logged in to post a comment.