ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசானது, மின்சாரம் வாங்குகிறேன் என்ற பெயரில், மக்களின் வரிப்பணம் பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமத்திற்கு அள்ளிக்கொட்ட முடிவு செய்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில், மேற்குவங்க எல்லையையொட்டி இருப்பது கோடா மாவட்டம். இங்கு பிரதமர் மோடியின் நண்பரும், பாஜக-வால் வளர்த்துவிடப்பட்ட பெருமுதலாளியுமான அதானி, 1600 மெகாவாட் அனல்மின் நிலையம் ஒன்றை அமைத்து வருகிறார். முழுக்க முழுக்க அண்டை நாடான வங்கதேசத்திற்கு மின்சாரம் விற்பனை செய்வதற்காக இந்த அனல்மின் நிலையத்தை அதானி நிர்மாணித்து வருகிறார்.

எனினும், எந்த மாநிலத்தில் மின்சாரம் உற்பத்தியாகிறதோ, அந்த மாநிலத்திற்கு 25 சதவிகித மின்சாரத்தை கொடுத்தாக வேண்டும் என்பதன் அடிப்படையில், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும் அதானி மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால், கோடா மாவட்ட அனல்மின் நிலையத்திலிருந்து அந்த மின்சாரத்தை வழங்க முடியாது என்று கூறிவிட்ட அதானி, பதிலாக வேறு வகையில், 25 சதவிகித மின்சார கொடுப்பதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், நான் சொல்லும் விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளார். மின்சாரத்தின் விலையையும் கடுமையாக உயர்த்தியுள்ளார்.

ஆளும் பாஜக அரசும், எந்த கேள்வியும் எழுப்பாமல், ‘அதானி பவர் நிறுவனம்’ சொல்லும் விலைக்கு மின்சாரத்தை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளது. கைப்பணத்தை தரவில்லையே.. மக்களின் பணம்தானே போகிறது, என்ற எண்ணம் பாஜக தலைவர்களுக்கு.ஆனால், அதானியிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரம் வாங்குவதால், ஜார்க்கண்ட் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரு. 296 கோடியே 40 லட்சம் கூடுதல் செலவாகும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 25 ஆண்டுகளுக்கு அதானியிடமிருந்து ஜார்க்கண்ட் அரசு மின்சாரம் வாங்கியாக வேண்டும் என்பதால், ரூ. 7 ஆயிரத்து 410 கோடியை அதானிக்கு அள்ளிக் கொடுத்தாக வேண்டும். ஆளும் பாஜக அரசு கொஞ்சமும் தயங்குவதாக இல்லை. மக்கள் வரிப்பணத்தை அதானி நிறுவனத்திற்கு சூறைவிட தயாராகி விட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.