திருச்சி:
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைத் தவிர வேறு எந்தக்
கட்சியாலும் இத்தனை கட்டுக் கோப்பான, கடமை உணர்வுடன் கூடிய, அர்ப்பணிப்பு மிக்க, ஒட்டுமொத்த தமிழகத்தையும் தழுவிய பிரச்சாரப் பயணத்தை நடத்திவிட முடியாது என்று
கூற முடியும். அத்தனை பெருமை களுக்கும் உரிய மாபெரும் பிரச்சார பயண பேரியக்கத்தை கடந்த ஒரு  வாரகாலமாக வெற்றிகரமாக நடத்திதிருச்சியை நோக்கி முன்னேறி யிருக்கின்றன தமிழகத்தின் ஆறு முனைகளிலிருந்து புறப்பட்ட செங் கொடிப் பயணங்கள்.

மேற்கே கேரளத்தின் எல்லையும், தமிழகத்தின் எல்லையும் சங்கமிக்கிற – உலகின் அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களில் ஒன்றான நீலகிரி மலையின் உட்பகுதியில் அமைந்துள்ள எருமாடு கிராமத்தில் துவங்கி… முக்கடலும் சங்கமிக்கும் குமரி
மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள கொல்லங்கோட்டில் துவங்கி… என்றென்றும் விடுதலை வேட்கையை ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் அக்னி குஞ்சுபோல விதைக்கும் மகாகவி பாரதி பிறந்த மண் எட்டையபுரத்தில் துவங்கி… அறுபடை வீடுகளில் ஒன்றாக போற்றப்படும் திருத்தணியில் துவங்கி… வங்கக் கடல் பள்ளி கொண்டிருக்கும் கடலூரில் துவங்கி… விடுதலை யுத்தத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சாவுமணி அடிக்க துவக்கப்புள்ளியாய் அமைந்த வேலூரில் துவங்கி… காவிரி மாநகரமாம் – தமிழகத்தின் மையப்புள்ளியாம் திருச்சியை நோக்கி செங்கொடிகள் ஏந்தி, கையில் உண்டியல்கள் ஏந்தி, போராடுவோம் தமிழகமே என்று முழக்கமிட்டு, தமிழக மக்கள் ஏன் போராட வேண்டும் என்று விளக்குகிற ஆயிரமாயிரம் பிரசுரங்களை ஏந்தி – ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லை யிலும், ஒவ்வொரு கிராமத்தின் எல்லை
யிலும் உணர்ச்சிப் பிளம்பாய் முழக்கமிட்டு செம்பதாகையை உயர்த்திப் பிடித்து காத்திருந்து வரவேற்கும் ஆயிரம் ஆயிரம் தோழர்களை தழுவியவாறு – தமிழக மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளை முழங்கிய வாறு – மோடி அரசுக்கும் எடப்பாடி அரசு க்கும் முடிவு கட்டுவதே வழி என தீர்வும் சொல்லி – உண்மைகளையெல்லாம் உரக்கப் பேசி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்தும் அதே உத்வேகத் தோடு செல்கிற சக்தி உண்மையில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உண்டு என்பதை பறைசாற்றி நிறைவுபெறுகிறது பிரச்சாரப் பேரியக்கம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘போரடுவோம் தமிழகமே’ மாற்றுக் கொள்கையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலும், கடலூரில் இருந்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலும், திருவள்ளூரில் இருந்து மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் தலைமையிலும், எட்டயபுரத்தில் இருந்து மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையிலும், நீலகிரியில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமையிலும், வேலூரில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையிலும் கடந்த 8 ஆம் தேதி 6 முனைகளில் இருந்து பிரச்சார பயணக்குழு புறப்பட்டது. இந்த பிரச்சார பயணக்குழு பல்வேறு மாவட்டங்களை கடந்து வியாழக்கிழமை திருச்சியை வந்தடைகிறது.
இதனை தொடர்ந்து தமிழகம் தழுவிய பிரச்சார பயண நிறைவு பொதுக்கூட்டம் அன்று மாலை திருச்சி உழவர் சந்தையில் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகிக்கிறார். மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா வரவேற்புரையாற்றுகிறார்.

அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி, அ.சவுந்தரராசன், உ.வாசுகி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். முடிவில் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் நன்றி கூறுகிறார். முன்னதாக கோஹினூர் தியேட்டர் அருகில் இருந்து மாலை 4 மணியளவில் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.