====எஸ்.எஸ்.சுப்பிரமணியன்===
நவீன குல மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக மின்சாரம் உள்ளது என்றால் மிகையாகாது. நாட்டின் உயிர் நாடியாக உள்ள மின்சார உற்பத்தியில் பல உற்பத்தி காரணிகள் இருந்த போதிலும் நிலக்கரி மின்சார உற்பத்தி என்பது முதலிடத்தை வகிக்கின்றது என்பது அரசின் புள்ளி விவரங்கள் மூலம் உணர முடிகின்றது.

இந்திய நாட்டின் மின்சார உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நிலக்கரி, ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கர், மேற்குவங்கம், மராட்டியம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திர பிரதேசம், மேகாலயா, சிக்கிம், அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலக்கரி படிவங்கள் உள்ளதும், அதை வெட்டி எடுத்தலும் நடைபெற்று வருகின்றது. இதில் தமிழகத்தில் நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரியும் அடங்கும்.

இந்தியாவில் பல மாநிலங்களில் நிலக்கரி கிடைத்த போதிலும் அதிகமாக நிலக்கரி ஆதாரம் உள்ள மாநிலமாக ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசாவும் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் இந்தியாவின் மொத்த நிலக்கரி ஆதாரத்தில் 38 சதவீதம் உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இன்றைய நிலக்கரி தேவையை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது சர்வதேச ரீதியில் சுமார் 120 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி படிவங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூட இன்றைய பயன்பாட்டின் அடிப்படையில் சுமார் 120 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி படிவங்கள் உள்ளதாக தெரிய வருகிறது. உலக நாடுகளில் நிலக்கரி இருப்பில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதுழூ

இந்திய நாட்டின் சுமார் 100 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி படிவங்கள் இருந்த போதிலும், அதை முறையாக வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவதற்கு பதிலாக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிலக்கரியை இறக்குமதி செய்வது அதன் மூலம் பல கோடி ரூபாயை கொள்ளையடிப்பது தான் இன்றைய ஆட்சியாளர்களின் கொள்கையாக உள்ளது. அதாவது உள்நாட்டு நிலக்கரியின் விலை 1 டன்னுக்கு ரூ.3600 ஆக உள்ள போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரியின் விலை 1 டன்னுக்கு ரூ.3600 ஆக உள்ள போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரியின் விலை 1 டன்னுக்கு ரூ.5,200 ஆக உயர்ந்து நிற்கின்றது. இந்திய ஆட்சியாளர்கள் வெளிநாட்டு நிலக்கரியைப் பயன்படுத்துகின்ற பாய்லர்களை வடிவமைக்க வேண்டும் என்று கொள்கை முடிவாக எடுத்துள்ளதிலிருந்து இனி இந்தியாவில் மின் உற்பத்திக்கு வெளிநாட்டு நிலக்கரியையே பயன்படுத்துவது அதன் மூலம் தனது கொள்ளையை தொடர்ந்து நடத்திடுவது என்பது தெட்டென தெரிகிறது.

இந்திய நாட்டின் தற்போதைய உற்பத்தி திறன் 3,29,186 மெகாவாட்டில் 1,93,427 மெகாவாட் அதாவது 58 சதவீதம் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி மின் உற்பத்தி என்பது நடைபெற்று வருகிறது. அதாவது 1,93,427 மெகாவாட் மின் உற்பத்திக்கு 23,21,124 மெட்ரிக் டன் நிலக்கரி ஒரு நாளைக்கு தேவைப்படுகின்றது.

தமிழகத்திலும் கூட மொத்த மின் உற்பத்தியில் தற்போதைய நிலவரப்படி 4320 மெகாவாட் அதாவது 60.47 சதவீதம் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தியே மின்சார உற்பத்தி என்பது நடைபெற்று வருகிறது. இந்த மின் உற்பத்திக்கு 51,640 மெட்ரிக் டன் நிலக்கரி நாள் ஒன்றுக்கு தேவைப்படுகிறது. அதாவது 1 மெகாவாட்டிற்கு மின் உற்பத்திக்கு 12 டன் அல்லது 16 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அப்படிப் பார்க்கும் போது தமிழகத்தில் நிலக்கரி மூலம் மின் உற்பத்திக்கு ஒரு நாளைக்கு 70,000 மெட்ரிக் டன்னும் ஒரு ஆண்டுக்கு 2.75 ஆயிரம் கோடி டன் நிலக்கரி தமிழக அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்க தேவைப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு 23,21,124 மெட்ரிக் டன் நிலக்கரி தேவையை கோல் இந்தியா நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, முதலிடத்தை வகிக்கின்றது.
நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும் அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினை கொண்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் (2018-19) கோல் இந்தியா நிறுவனம் 63 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்துவது போல சிமெண்ட், சர்க்கரை, அலுமினியம், இரும்பு எஃகு ஆலைகளும் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
இந்திய நாட்டில் 120 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி படிவங்கள் இருப்பதாகவும், அந்த ஆதாரத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி நிறுவனங்கள், சிமெண்ட், அலுமினியம், காகித தொழிற்சாலை, சர்க்கரை போன்ற நிறுவனங்களுக்கு நிலக்கரி தடையின்றி அளிக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் நிலக்கரி விநியோகம் என்பது மே, ஜூன், மாதங்களில் அரசால் நடத்தப்படுகின்ற அனல் மின் நிலையங்களுக்கு முன்னுரிமை அளித்து நிலக்கரியை விநியோகிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் உள்ள 115 அனல் மின்நிலையங்களில் 25க்கு மேற்பட்ட அனல் மின்நிலையங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரியே இருப்பு இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு, மனித சமுதாய இயக்கத்திற்கு மின்சார உற்பத்தியும், அதுவும் நிலக்கரி மூலம் மின்உற்பத்தி என்பது முக்கிய பங்கு வகிப்பதனால் நிலக்கரி மூலம் இயங்கும் மின் நிலையங்களுக்கு போதிய நிலக்கரி இல்லாததால் மின்உற்பத்தி பாதிப்பு என்பது ஏற்படக்கூடாது என்பதை கணக்கில் கொண்டு நிலக்கரி மூலம் மின்உற்பத்தி செய்யப்படும் நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் அது பிற தொழிற் நிறுவனங்களை பாதிக்கும் என்பதையும் அரசு கணக்கில் கொண்டிருக்க வேண்டும்.

நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிலையங்கள் மட்டுமல்லாமல் சுயதேவை மின்உற்பத்தியாளர்கள் இணை மின்உற்பத்தியாளர்கள் மூலமும் தனியார் மூலமும் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி விநியோகம் தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சுயதேவை மின் உற்பத்தியாளர்களையும், தனியார் மின் உற்பத்தியாளர்களையும் வெகுவாக பாதிக்கும்.
சுயதேவை மின் உற்பத்தியாளர்கள், இணை மின்உற்பத்தியாளர்கள், தனியார் மின்நிறுவனங்களும், நிலக்கரி விநியோகம் செய்ய நீண்டகால ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ள நிலையில் எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் நிலக்கரி விநியோகத்தை நிறுத்துவது அந்நிறுவனங்கள் மூலம் மின்உற்பத்தி செய்வது பாதிப்பதனால் மின் தொகுப்புக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காமல் போவதோடு, ஒட்டுமொத்த மின் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமின்றி சிமெண்ட், சர்க்கரை, காகித ஆலை, டயர் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கி வரும் நிலக்கரியை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் நிறுத்துவது. அந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி பாதிப்பதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் நிலக்கரி இருப்பு போதிய அளவு இருந்த போதிலும் அரசு சார்ந்த மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு கோல் இந்தியா மூலம் நிலக்கரி விநியோகம் என்பது உறுதி செய்யப்பட்ட பின்பும், உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை போதிய நாட்களுக்கு இருப்பு வைக்காமல் இருப்பதை அரசு கண்காணித்து உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைக்க ஏற்பாடு செய்திருந்தால் அரசின் உத்தரவு தேவையற்ற ஒன்றாயிருக்கும்.

நிலக்கரி இறக்குமதியை அரசு குறைக்க நடவடிக்கை எடுத்த நேரத்தில் உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாத காரணத்தினால் அனைத்து மின்நிலையங்களிலும் நிலக்கரி இருப்பு மிக மிக குறைந்ததோடு, போதிய நிலக்கரி இல்லாததால் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மின்பற்றாக்குறை நிலவுகின்ற இக்காலத்தில் அரசு சார்ந்த மின்உற்பத்தி நிறுவனங்கள் மின்உற்பத்தியை நிறுத்துவது மின்பற்றாக்குறையைப் போக்க எந்தவிதத்திலும் உதவாது என்பதை அரசு கணக்கில் கொள்ள வேண்டும்.

நாட்டின் மின்சார தேவையில் 60 சதவீதம் நிலக்கரி மூலம் மின்உற்பத்தி என்ற நிலையில் தேவையான நிலக்கரியை அரசு விநியோகம் செய்யாத காரணத்தால் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு மின்உற்பத்தி செய்யும் நிலையங்கள் மின்உற்பத்தியை நிறுத்தவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்உற்பத்தி நிலையங்கள், சுய தேவை மின்உற்பத்தியாளர்கள், இணை மின் உற்பத்தியாளர்கள் மின்உற்பத்தியை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால் ஒட்டு மொத்த மின்தொகுப்புக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காததனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு அதை சமாளிக்க திறந்த வெளி மின்பரிவர்த்தனை மூலம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி விநியோகிப்பதால் மின்நுகர்வோர்கள் அதிக மின்கட்டணத்தை செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவைகளுக்கெல்லாம் காரணம் அரசின் நிர்வாக திறமை இன்மையும் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப முன்கூட்டியே திட்டமிடாதப் போக்கும் சாதாரண மின்நுகர்வோர்கள் அந்த சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் நடவடிக்கையால் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படுவார்கள் மின்நுகர்வோர்களே ஆவர்.

தமிழகத்திலும் கூட அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் மின்உற்பத்தி நிலையங்களுக்கு போதிய நிலக்கரி கிடைக்காத காரணத்தினால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலையும், அதனால் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க அதிக விலை கொடுத்து நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகப்படுத்த நிலை ஏற்பட்டதை அரசால் மறுக்க இயலுமா?

பொதுவாக இந்திய மின்உற்பத்தியில் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு மின்உற்பத்தி என்பது பெரும் பங்கு வகிக்கும் நிலையில் நிலக்கரி படிவங்களை மேலும் கூடுதலாக கண்டறிய முயற்சிப்பதோடு மாற்று எரிபொருள் மூலம் மின்உற்பத்தி என்பதற்கு அதிக கவனமும், முக்கியத்துவமும் கொடுத்தால் தான் எதிர்கால தேவையை எதிர் கொள்ள முடியும். லாப வெறியோடு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை நிற்கும் மத்திய அரசு இதை செய்யுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.