சேலம்,
சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு சேர்க்கை அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெற்ற கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு புதனன்றுநடைபெற்றது. இந்த கலந்தாய்வில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு எந்த அழைப்பும் வராததால் விரக்தியடைந்த மாணவிகள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிஅடைந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் ஆட்சியரை சந்தித்து மனு அளித்து கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: