சேலம்,
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தின் சிறுமைக்கு காரணமானவர் என மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில யற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் போராடுவோம் தமிழகமே, எழுவோம் தமிழகமே என்ற முழக்கத்துடன் வேலூரிலிருந்து புறப்பட்ட பிரச்சார குழுவினருக்கு செவ்வாயன்று சேலம் மாவட்டத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேட்டூர் காந்தி சிலை அருகில் மாவட்டக் குழு உறுப்பினர் வி.இளங்கோ தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் சிறப்புரையாற்றுகையில், தமிழகத்தில் மக்களின் போராட்டங்களால் மட்டுமே கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றனர். அதனடிப்படையில் தான் ஜல்லிகட்டு, நெடுவாசல், தற்போது ஸ்டெர்லைட் போராட்டங்களில் மக்கள் வெற்றி பெற்று உள்ளனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் உயிர் பலி ஏற்பட்டு மக்களின் ஒற்றுமையால் இன்று அந்த ஆலையை அரசு மூட உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உழைப்பாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட்ட குணம் மிக்கவர்களாக தமிழகத்தில் மாறி வருகின்றனர். தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் விரோத ஆட்சியின் காரணமாக போராட வீதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக மேட்டூர் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கெம்பிளாஸ் தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் நடைபெற்ற தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தினால் தொழிலாளர்களின் சில கோரிக்கைகள் நிர்வாகத்தால் ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிரந்தர, பகுதி நேரம், ஒப்பந்தம் என பிளவுப்படுத்தி உழைப்பு சுரண்டலை செய்து வருகிறது.

ஆகவே, நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ட ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் இருக்கும் விசைத்தறி, கைத்தறி தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இளம்பிள்ளை பகுதியில் தயாரிக்கப்படும் சேலைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. சேலம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி தொழில்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிகைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சாம்பளி;
புதுச்சாம்பளி பகுதியில் மேட்டூர்-கொளத்தூர் செயலாளர் வசந்தி தலைமையில் பிரச்சார குழுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாநிலகுழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றுகையில், சேலம் மாவட்டத்தின் விளைநிலங்களை பாதிக்க செய்யும் உயர் மின் கோபுரங்களை விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. சொற்ப தொகையை விவசாயிகளுக்கு வலுக்கட்டாயமாக வழங்கி கட்டாயப்படுத்தி பவர்கிரீடு நிறுவனத்தார் உயர் மின் கோபுரங்களை அமைத்து வருகின்றனர். இதேபோல், விவசாய தொழிலாளர்களுக்கு உதவியாக இருந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை அரசு முடக்கிவைத்து ஏழை விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்துள்ளது என தெரிவித்தார்.

மேச்சேரி;
மேச்சேரி பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் மணிமுத்து தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு பேசுகையில், தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் கனவை சிதைத்த பெருமை தற்போது தமிழக முதல்வருக்கு உண்டு. இதேபோல், கல்வியை தனியாருக்கு தாரைவார்க்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது என குற்றம்சாட்டினார்.

ஜலகண்டாபுரம்:
நங்கவள்ளி ஒன்றியம் ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் புதுச்சாம்பளி முதல் இரண்டு சக்கர வாகன பேரணியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பி.சுகந்தி பேசுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்குழந்தைகள் மீது பாலியல் வண்புணர்ச்சி அதிகரித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியான ஜலகண்டாபுரம் பகுதியில் எட்டு வயது முதல் பதினாறு வயது வரையிலான ஏராளமான பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி உள்ளனர்.

பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் இருந்தும் முறையாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதில்லை. அருகில் உள்ள கேரளா மாநிலம் இடதுசாரிகளால் ஆட்சி செய்யப்படுகிறது. அங்கு நிர்பயா குழுக்கள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் செயல்படுகிறது. தமிழகத்தில் இந்த குழுக்கள் செயல்படுவதில்லை. பெண்கள் மீதான குற்றங்களை தடுக்க அரசு போதிய கவனம் செலுத்துவதில்லை என ஆவேசமாகப் பேசினார்.

எடப்பாடி;
எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு தாலுகா குழு உறுப்பினர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அழிக்கும் வகையில் செயல்படுகிறார். மத்திய அரசின் ஏஜெண்டாக அவர் உள்ளார் என்பது மக்களுக்கு தெளிவாக புரிகிறது. எடப்பாடி தொகுதி மக்கள் அவர் எங்கள் ஊர்காரர் என்று சொல்ல கூச்சப்படும் அளவில் அவரின் நிர்வாக திறன் உள்ளது. சேலத்தின் பெருமைக்கு மேட்டூர் அணை, மல்கோவா மாம்பழம், சேலம் உருக்காலை என தனி அடையாளம் உள்ளது. ஆனால், சேலத்தின் சிறுமைக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளார். மக்களுக்கு பயனளிக்காத திட்டங்களை செயல்படுத்தி தன்னையும் தனது கட்சியினரையும் பாதுகாக்கும் பணியினை செய்து வருகிறார். அரசின் முடிவுகள் மக்களுக்கு எதிரான வகையில் உள்ளது என தெரிவித்தார்.

கொங்கணாபுரம்- மகுடஞ்சாவடி:
கொங்கணாபுரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கணபதி தலைமையில் பிரச்சாரகூட்டம் நடைபெற்றது. இதன்பின் மகுடஞ்சாவடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றி பேசுகையில், தமிழகத்தின் விளை நிலங்களை பாதிக்கும் வகையில் சேலம்- சென்னை பசுமைவழிச் சாலையை தமிழக அரசு அறிவித்துள்ளது. சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் இந்த சாலைஅமைய உள்ளது. இந்த சாலையால் சேலம் முதல் தாம்பரம் வரை உள்ள விளைநிலங்கள் பல ஹெக்டேர் அழியும் அபாயம் உள்ளது. மேலும் இந்த சாலை அமைய உள்ள இடத்தில் குடியிருக்கும் மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். எட்டு மலைகுன்றுகள் உடைக்கப்பட்டு இந்த சாலை செயல்படுத்துவதால் பசுமை அழிக்கப்படும்.

ஆகவே, அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்திய சில விவசாயிகளை கைது செய்து விசாரனை நடத்திய காவல் துறையினரின் செயல் கண்டிக்கத்தக்கது. எட்டுவழிச் சாலைகள் செயல்படுத்துவது குறித்து விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்க வேண்டும். இதேபோல், கெயில் கேஸ், மீத்தேன் திட்டம், மின்உயர் கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்தும் விளைநிலங்களை பாதிக்காத வகையில் மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து சேலம் இளம்பிள்ளை பகுதியில் சேலம் தாலுகா செயலாளர் சுந்தரம் தலைமையிலும், கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், சிபிஎம் மாநகர மேற்கு குழு செயலாளர் எம்.கனகராஜ் தலைமையிலும், மெய்யனூர் மெயின்ரோட்டில் சிபிஎம் வடக்கு செயலாளர் எம்.முருகேசன் தலைமையிலும் இருசக்கர வாகனபேரணியுடன் பிரச்சார குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பிரச்சார இயக்கங்களில் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எம்.குணசேகரன், எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், எ.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.