சேலம்,
கம்யூனிஸ்டுகள் உண்டியல் குழுக்கிகள் என்பதில் பெருமைபடுகிறோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராடுவோம் தமிழகமே என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தின் 6 முனைகளில் இருந்து பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக வேலூரில் இருந்து புறப்பட்ட பிரச்சார குழுவினர் செவ்வாயன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர். இதைத்தொடர்ந்து பால் மார்கெட் பகுதியில் மாநகர மேற்குச் செயலாளர் எம்.கனகராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் பங்கேற்று பேசியதாவது,

நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்று சர்ச்சைக்குரிய கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதும், தற்போது வெளியில் தலையை காட்ட முடியாமல் இருப்பதும் வேடிக்கையான ஒன்று. போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற ரஜினியின் பேச்சு தவறானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை குறித்து சட்டமன்றத்தில் பேசும்போது பிரதமரிடம் கெஞ்சி திட்டத்தை வாங்கி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் முதல்வர் பதவியே கெஞ்சிதான் வாங்கியுள்ளார். சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்ல பல வழிகள் இருந்தும் ஏன் புதிதாக எட்டு வழிச் சாலை செயல்படுத்தப்படுகிறது. அதில் பல முறைகேடுகளை நடத்த எடப்பாடி திட்டமிடுகிறார்.

மேலும்,சாலைகளில் பல்வேறு சுங்கச்சாவடிகளை அமைக்கவும் வாய்ப்புள்ளது. சேலம்- சென்னை பசுமைவழிச் சாலை வந்தால் விளைநிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். சேலம் பசுமை வழிச்சாலை என்பது நாட்டின் பசுமையை அழிக்கும். இந்த திட்டம் சேலத்தின்அடையாளமானசேலம் உருக்காலையில் உள்ள கனிமங்களை ஜிண்டால் நிறுவனத்திற்கு கொள்ளையடித்து கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. தற்போது எட்டுவழிச் சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகள் சேலத்தில் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி இரவு நேரத்தில் கைது செய்யும் காவல் துறை, ஏன் எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை.

உண்டியல் குலுக்கிகள்:
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டது மக்கள் விரோதச் செயல். நிலம், நீர், காற்றுக்காக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம். தமிழக சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை பற்றிப் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை நடந்த எந்த விசாரனை ஆணையம் நடத்திய விசாரனைகள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பினர். மேலும்,புதிய தலைமுறை விவாத நிகழ்வில் பாஜக தலைவர்தமிழிசை, உண்டியல் குலுக்கி எனபேசியது கம்யூனிஸ்டுகளுக்கு பெருமைதான். எங்கள் தீக்கதிர் பத்திரிகைக்கு பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் தறுகிறோம். ஆனால் ஸ்டெர்லைட் சம்மந்தமாக எந்த தவறான செய்தியும் எழுதக்கூடாது என கூறியதைமறுத்து, எங்களுக்கு மக்கள் வாழ்வு மட்டுமே முக்கியம் என தெரிவித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். வேதாந்தா நிறுவனத்துடன் கைகோர்த்து பணம் வாங்கியவர்கள் பாஜகவினர்.

யாருக்கான பிரதமர்?
இதேபோல், மோடி பொதுத்துறை நிறுவனங்களை அழித்து வருகிறார். ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறியது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஜிஎஸ்டி என்ற பெயரில் தொழில்வளத்தை அழித்து சிறு, குறு நிறுவனங்களின் வர்த்தகத்தை பாதிப்படைய செய்துள்ளனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. ஓட்டல் கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை மத்திய, மாநில அரசுகளுக்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. பெண்கள் பயன்படுத்தும் நேப்கின்களுக்கு வரி விலக்கு இல்லை. ஆகவே, இவர் யாருக்கான பிரதமர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மக்களின் பல கட்ட போராட்டத்தின் விளைவால் இன்று காவேரி மேலாண்மை ஆணையம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திட்டமிட்டு நீட் தேர்விற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் செயல்.நீட் தேர்வினால் இன்று அனிதா உள்ளிட்ட மூன்று பேர் தற்கொலை செய்துள்ளனர். ஏழை மாணவர்களுக்கு எட்டாகனியான நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் வெளி மாநிலத்திற்கு தள்ளப்படுகிறார்கள். தமிழகத்தில் நீட் தேர்விற்காக பல தனியார் பயிற்சி மையங்கள் துவங்கி மக்களிடம் கொள்ளையடித்து வருகின்றன. இதனால் மருத்துவம் ஏழை மக்களுக்கு எட்டா கனியாகிவிட்டது. தற்போது மருத்துவமனைகளில் உறுப்புகள் கொள்ளையடிக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. தனியார் மருத்துவமனைகள் வளர அரசு மருத்துவமனைகள் அழிக்கப்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் தற்கொலைகள்:
தமிழகத்தில் பல பள்ளிகளை மூட எடப்பாடி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் புதிதாக பல அரசு டாஸ்மாக் கடையை திறக்க முடிவெடுத்துள்ளது என்பது வெட்கக்கேடானது. மதுபான கடை வேண்டாம் என இப்பிரச்சனையில் தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில், தந்தை குடிக்கக்கூடாது என மகன் தூக்கிட்டு தற்கொலை செய்யும் சம்பவங்களும் தமிழகத்தில் நடந்துள்ளன. இதேபோல், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. விளை நிலங்களில் விவசாயம் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டதிற்கு செவி சாய்க்காதவராக, அதேநேரம் உலக அழகியை பார்த்து பேசக்கூடியவராக இருக்கிறார் நமது பிரதமர் மோடி. மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என இயேசு கூறினார் என பால் தினகரன் பேசியது விமர்சனத்திற்கு உரியது. இவர் கோவையில் வன நிலங்களை கொள்ளையடித்து காருண்யா பல்கலைக்கழகத்தை கட்டியவர். இவர் அப்படி மோடியை பற்றி பேசியது, தனது நிறுவனத்தை பாதுக்காக்கவே.

இந்திய பொதுத்துறை வங்கிகளில் பெரு முதலாளிகள் பல கோடி ரூபாய் வங்கி கடன்களை வாங்கி வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர். மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி உள்ளிட்டவர்கள் பல கோடி ரூபாய் வாங்கி விட்டு ஏமாற்றும் நிலையில், கல்வி கடன்கட்டா முடியாத சூழலில் மாணவர்களை வங்கி அதிகாரிகள் மிரட்டுவதால் மானத்திற்காக இன்று தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உள்ளது.

ஊடுருவும் ஆர்எஸ்எஸ்:
மேலும், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் இந்து மதவாத அமைப்பு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பணியமர்த்தும் வேலையை பாஜக செய்து வருகிறது. மேலும் சாதி வெறியுடன் தமிழகத்தில் கொலைகள் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் சிவகங்கை கச்சநத்தம் கொலை நடைபெற்றுள்ளது. இனி மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தேர்தல் நெருங்குவதால் பலர் வந்து மக்களை சந்தித்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தாலும், மக்களின் மீது அக்கறையுடன் செயல்படும் இடதுசாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பக்கத்து மாநிலமான கேரளாவில் ஒரு நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. இதே ஆட்சி தமிழகத்திலும் நடைபெற மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மதுக்கூர் இராமலிங்கம் பேசினார்.

முன்னதாக, இந்த பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ரவீந்திரன், எஸ்.கண்ணன், பி.சுகந்தி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, சேலம் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாநகர மேற்கு குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: