சென்னை:
அரசுக்கு வர வேண்டிய வருவாயைக் கொள்ளையடித்துவிட்டு கஜானா காலி என்று அரசு ஏமாற்றுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

சென்னையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜேக்டோ – ஜியோ அமைப்பினரை நேரில் சந்தித்து செவ்வாயன்று (ஜூன் 12) இரவு கே.பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜேக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர். இருதயநோய், சர்க்கரை நோய் பாதித்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உயிரை பணையம் வைத்து போராடி வருகின்றனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்களை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அதற்கு முழு பொறுப்பை தமிழக அரசுதான் ஏற்க வேண்டும்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியதால் அதனை ஆய்வு செய்ய குழு அமைத்தார். அந்தக்குழு அறிக்கை தயார் நிலையில் வைத்திருக்கிறது. அதனை ஏற்று அரசு அமல்படுத்த மறுக்கிறது.

இளைஞர்களுக்கு இனி நிரந்தரமான அரசு ஊழியர், ஆசிரியர் பணியே இருக்காது என்ற நிலையை உருவாக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள். பணிகளை அவுட்சோர்சிங் முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் காண்ட்ராக்ட் விட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் தமிழக அரசு நிர்வாகத்தையே காண்ட்ராக்ட் விடும் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. இதனால் அரசு எந்திரம் செயலிழக்கும் அபாயம் ஏற்படும். இவற்றையெல்லாம் எதிர்த்துத்தான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடுகின்றனர். இப்போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் நடந்த கனிம வளக்கொள்ளையில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளையால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி சூறையாடப்படுகிறது. தாதுமணலில் பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளை நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் விசாரித்து அந்த பணத்தை கைப்பற்றுவதோடு, கடத்தலை தடுத்தால் அரசு கஜனா நிறையும். ஆனால், அரசுக்கு வர வேண்டிய வருவாயை மடைமாற்றம் செய்து கொள்ளையடித்துவிட்டு, பணம் இல்லை என்பது ஏமாற்றுவேலை.
மார்க்சிஸ்ட் கட்சியும், அதன் வர்க்க வெகுஜன அமைப்புகளும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்குவார்கள். இப்போராட்டத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.இச்சந்திப்பின்போது சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உடனிருந்தார்.

முதல்வரை சந்திக்கச் சென்ற நிர்வாகிகள் கைது:                                                                                                                         கிராமப்புற பள்ளிகளை மூடக்கூடாது, நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று 3 ஆவது நாளாக உண்ணா விரதப் போராட்டம் நீடித்து வந்த நிலையில் அரசுத் தரப்பில் இருந்து யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாங்கள் சென்று முதல்வரை சந்திக்கிறோம் என புதனன்று (ஜூன் 13) மாலையில் பேரணியாக தலைமைச் செய லகம் நோக்கிப் புறப்பட்டனர். காவல் துறையினரின் தடையைமீறி ஊர்வலமாகச் சென்றவர்களை நேப்பியர் பாலம் அருகே காவல் துறையினர் தடுத்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

5 பேர் மயக்கம் 
          முன்னதாக 3 நாளாக உண்ணாவிரதம் இருந்தஜேக்டோ ஜியோ நிர்வாகிகளில் 5 பேர் மயக்கமடைந்தனர். உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வது என ஜேக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: