====பேராசிரியர் கே. ராஜு===                                                                                                                                                           (சென்ற வாரத் தொடர்ச்சி) 
1940-களிலும் 50-களிலும் லாங்லே நினைவு வானியல் சோதனைக்கூடம் நாசாவுக்குத் தேவையான ஆரம்பகட்ட தொழில்நுட்ப ஆதரவினை அளித்தது. அன்றைய கட்டத்தில் பல சமூகத் தடைகளைத் தாண்டிய மூன்று ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் விஞ்ஞானிகளின் விண்வெளிப் பணிக்குழு கணினியைப் பயன்படுத்தத் தொடங்கியது.கேதரின் ஜான்சன், டோராதி வாகம், மேரி ஜாக்சன் ஆகிய அந்த மூவரின் பணி மிகமிக இன்றியமையாத பணியாக மாறியது. `மெர்க்குரி மிஷன்’ என்றழைக்கப்பட்ட மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் அவர்கள் மிக முக்கியமான பொறுப்பினை ஏற்று செயலாற்றினர். ஜான்சனுடைய குழுவே விண்கலம் செல்ல வேண்டிய பாதை, இணைக்கப்பட்ட கருவிகள் செயல்படும் தருணம் போன்ற அனைத்து கணக்கிடல்களையும் துல்லியமாகச் செய்தது. 

காசினியைப் பின்னிருந்து இயக்கிய சக்தி
சனி கிரகத்தின் மிகப் பெரிய துணைக்கிரகமான டைட்டனிடமிருந்து புவிஈர்ப்பு உதவியைப் பெற்று சனி கிரகத்தின் வாயுவும் தூசுகளும் அடங்கிய வளிமண்டலத்தில் காசினி விண்கலம் பிரவேசித்ததை லிண்டா ஸ்பைக்கர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அது அவருக்கு உணர்ச்சிகள் நிரம்பிய தருணம். காசினித் திட்டம் தொடங்கியதிலிருந்து இறுதி வெற்றி வரை திட்டத்தின் பிரிக்கமுடியாத சக்தியாக அவர் தனது பங்கினை ஆற்றியிருந்தார்.1980-81 ஆண்டுகளில் சனி கிரகத்தைக் கடந்த வாயேஜர் ஆய்வுக்கலம் ஏராளமான தகவல்களைச் சேகரித்து அனுப்பியது. அந்த நேரத்தில்தான் ஜெட் புரொபல்ஷன் சோதனைச்சாலையில் ஸ்பைக்கர் ஒரு விஞ்ஞானியாகச் சேர்ந்தார். சனி கிரகத்திலிருந்து கிடைத்த தகவல்களைப் பார்த்த ஸ்பைக்கரிடம் “சனி கிரகத்தைச் சுற்றியுள்ள வளையங்கள் பற்றிய தகவல்களை மட்டுமே சேகரிக்க ஒரு பிரத்தியேகமான ஆய்வுக் கலத்தை அனுப்பினால் என்ன?” என்ற கேள்வி எழுந்தது. அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்த அவருடைய வற்புறுத்தல்கள் காரணமாக இறுதியில் நாசா அவரது திட்டத்தை ஏற்றுக் கொண்டது.

சனி கிரகத்திற்கு அனுப்பப்பட்ட காசினி விண்கலம், சனி கிரக வளையங்கள் மீது நடந்த ஆய்வுகள் எல்லாம் ஸ்பைக்கருக்கு பெருமிதமான தருணங்கள். இன்று 62 வயதில் என்சிலாடஸ் என்ற சனி கிரகத்தின் துணைக் கோளில் உயிரினம் உள்ளதா என்ற ஆய்வில் அவர் இறங்கியிருக்கிறார். அவருடன் பணிபுரிந்து வரும் மார்கன் என்ற பெண் விஞ்ஞானி ஸ்பைக்கரின் ஆய்வினைத் தொடர இருக்கிறார்.

இந்தியாவின் ராக்கெட் பெண்கள்
வெற்றிகரமான விண்வெளிப் பயணங்களில் முக்கியமான பங்கினை பெண் விஞ்ஞானிகளுக்கு அளிப்பதில் இஸ்ரோவும் பின்தங்கிவிடவில்லை. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலம் இந்தியாவின் மகத்தான சாதனை. இந்த வெற்றியின் பின்னணியில் பல பெண்களின் உழைப்பு இருந்தது. திட்டத்தை நிறைவேற்ற 18 மாதங்களே இருந்த நிலையில் மூத்த திட்ட இயக்குநர் டி.கே. அனுராதா உறுதியான தலைமையை அளித்து கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாக நிறைவேற்றினார்.ரித்து காரிதால், நந்தினி ஹரிநாத், மினாள் சம்பத், மௌமிதா தத்தா, க்ரிதி ஃபாஜ்தார் ஆகிய உதவி செயல்திட்ட இயக்குநர்களும் பொறியாளர்களும் அவரது பணிக்குத் துணை நின்றனர். இந்தக் குழுவினர் விடுமுறையே இன்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் உழைத்தனர். பல தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு அவர்கள் உடனடியாகத் தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. மங்கல்யான் பயணத்தின் வெற்றி இந்தப் பெண் விஞ்ஞானிகளின் கடின உழைப்பிற்குச் சான்றாக அமைந்தது.

செயற்கைக் கோள்களில் எரிபொருள் சிக்கனம், கணினிகளுக்குரிய மென்பொருள் உருவாக்கம் போன்ற பணிகளில் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அக்குழுவிற்குத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் வி.ஆர்.லலிதாம்பிகா. அண்மையில் பி.எஸ்.எல்.வி-37 விண்கலத்தில் 104 செயற்கைக் கோள்கள் இணைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட சாதனையில் இவரது பங்கு மகத்தானது. மங்கல்யான் 2, சந்திரயான் 2 ஆகிய பயணங்களைத் திட்டமிடுவதிலும் பல பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.விண்வெளி சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்வதில் மட்டுமல்ல, விண்வெளிப் பயணங்களை நிர்வகிப்பதிலும் பெண் விஞ்ஞானிகளுடைய பங்களிப்பு சிறப்பாகவே இருக்கிறது என்பதை அவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். பாரதி கண்ட புதுமைப் பெண்களை வாழ்த்துவோம்!

(உதவிய கட்டுரை : 2018 மார்ச் மாத சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் திருமிகு சுஷீலா சீனிவாஸ் எழுதிய கட்டுரை)

Leave a Reply

You must be logged in to post a comment.