கோவை,
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் பிரச்சார இயக்கம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி கூறினார்.

இதுதொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் நாடு சீரழிந்துவிட்டது. மத்திய அரசின் கொள்கையால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. சாதாரண மக்கள் பரம ஏழைகளாகி விட்டனர். 2014-ல் இந்தியாவின் வளத்தில் 49 சதவிகிதத்தை ஒரு சதவீதம் பேர் வைத்திருந்தனர். தற்போது 73 சதவிகித வளத்தை ஒரு சதவிகிதம் பேர் மட்டுமே வைத்திருப்பதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. உண்மையில் 30 கோடி பேருக்கு மேல் வறுமையில் வாடுகின்றனர். பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். சமையல் சிலிண்டர் விலை 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைந்து, நிர்வாகச் செலவுகளே அதிகரித்துள்ளன. ஐஏஎஸ் தேர்ச்சி பெறாதவர்களையும் நிர்வாகப் பணியில் பயன்படுத்தும் வகையில் சட்டத்திருத்தும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது. அதாவது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை இந்திய ஆட்சியில் பணியில் நுழைக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தலித், சிறுபான்மை மக்கள் பாதுகாப்பற்ற நிலையில், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. விமானம் வாங்கியதில் இந்திய அதிகாரிகள் ஊழல் செய்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான விசாரணைக்கு உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஊழலே இல்லை என்கிறார் நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆகவே, மத்திய மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து செப்டம்பர் மாதம் முதல் 15 நாட்கள் பிரச்சார இயக்கம் நடத்த முடிவுசெய்துள்ளோம். முன்னதாக, விலைவாசி உயர்வைக் கண்டித்து ஜூன் 20 ஆம்தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கட்சியின் தேசியச் செயலாளர்கள் டி.ராஜா, நாராயணா, மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் தேசிய நிர்வாகக் குழுஉறுப்பினர் கே.சுப்பராயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: