தீக்கதிர்

மணல் திருட்டை தடுக்க நடவடிக்கைக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், பொதுமக்கள் சார்பில் மனுக்கள் அளித்தனர்.

தாராபுரம் பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தாராபுரம் அமராவதி ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி நடத்துவது போல் இரவிலும், பகலிலும் பகிரங்கமாக மணல் திருடப்பட்டு வருகிறது.  இதனால், அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வட்டாட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தடுக்க வேண்டிய வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மணல் திருட்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அமராவதி ஆற்றில் மணல் திருட்டை நிரந்தரமாக தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மயானம் கேட்டு மனு ;
திருப்பூர் மாவட்ட அவிநாசி தாலுகாவில் உள்ள வெள்ளிரவெளி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட குடும்பங்களுக்கு சேர்ந்த மக்கள் மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளிரவெளி அருகே கஸ்பா கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இப்பகுதியில், நீண்ட காலமாக ஆதிதிராவிடர்களுக்கு மயான வசதி இல்லை. ஊரின் ஒதுக்குபுறமாக உள்ள இடத்தில் ஒரு சடலம் புதைக்கப்பட்ட இடத்தில், மற்றொரு சடலத்தை புதைத்து வருகிறோம். சுடுகாட்டு பகுதியில் வீடுகளும், குப்பை கிடங்குகளும் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு பிரதிநிதிகளிடம் எடுத்து கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, எங்கள் பகுதியில் மயான வசதி செய்துதர ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இளைஞர் பெருமன்றம் மனு:
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் மாணவ – மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கு சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஓபிசி முதல் பட்டதாரி வரை அனைத்து சான்றிதழ்களுக்கும் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்துள்ளனர்.ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மாணவர்கள் சான்றிதழ்களை பெற முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். மேலும், பொறியியல் கல்லூரியில் சேருவதற்குகான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கு சான்றிதழ்கள் அவசியமாக தேவைப்படுவதால், உடனடியாக சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

100 நாள் வேலைத் திட்டம் ;
தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டம் 2005-ல் முதல் வேலை வழங்கியது. தற்போது ஏப். 1-ம் தேதியில் இருந்து அனைவருக்கும் வேலை வழங்காமல் உள்ளது. மேலும், வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். திருப்பூர், வீரபாண்டி 53-வது வார்டு பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஜெஜெ நகர் 3வது வீதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்தப்பகுதியில் கழிவு நீர் செல்ல சாக்கடை வசதி இல்லை. இந்நிலையில், அவரவர் வீட்டின் முன்பு குழி தோண்டி கழிவு நீரை தேக்கி வைக்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. காய்ச்சல் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. எனவே, கழிவு நீர் செல்லுவதற்கு சாக்கடை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குடும்பத்துடன் தர்ணா
திருப்பூர், வஞ்சிபாளையம் பகுதியில் வசிப்பவர் பாபா பக்ருதீன். இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் தன்னையும், தனது குடும்பத்தாரையும் தாக்கியதாக கூறி, நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மற்றும் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை சமாதனப்படுத்தி ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தனர். இதுகுறித்து பாபா பக்ருதீன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 6 மாதமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். இந்நிலையில், மின் இணைப்பை வீட்டின் உரிமையாளர் தவறாக பயன்படுத்தி வந்தார்.

இதுகுறித்து நான் அவரிடம் கேட்டதற்கு, வீட்டை உடனடியாக காலி செய்யும்படி கூறினார். வீட்டை காலி செய்ய அவகாசம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.  கடந்த ஏப்.மாதம் 19ம் தேதி இரவு எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி என்னை தாக்கினார். மேலும், வீட்டினுள் இருந்த பொருட்களையும் உடைத்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தோம். காவல் துறையினர் நேரில் வந்து பார்த்துவிட்டு, காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்கும்படி கூறி சென்றுவிட்டனர். இதையடுத்து காவல் நிலையம் சென்று, துணை ஆய்வாளரிடம் புகார் கொடுத்தோம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி தொலைபேசி மிரட்டல் விடுத்தனர். ஆகவே, வீட்டின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.