கோவை,
இதுவரை கிடைக்கப்பெற்ற உரிமைகள் அனைத்தும் போராடியே பெற்றுள்ளோம். ஆகவே, இருக்கிற உரிமைகளையும் பாதுகாக்க போராடுவோம் தமிழகமே என மார்க்சிஸ்ட் கட்சியின்மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கத்தில் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராடுவோம் தமிழகமே என்கிற பிரச்சார இயக்கம் தமிழகத்தின் ஆறுமுனையில் இருந்தும் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இப்பிரச்சார பயணக்குழுக்கள் ஜூன் 14 ஆம் தேதியன்று திருச்சியில் சங்கமித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில்மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். இந்த பிரச்சார பயணத்தின் ஒருபகுதியாக ஜூன் 8 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் எருமாட்டில் துவங்கிய பிரச்சார பயணக்குழு திங்களன்று இரவு கோவை மாநகருக்கு வருகை புரிந்தது.இதன்பின் கோவை சுந்தராபுரத்தில் கட்சியின் தெற்கு நகரக்குழு மற்றும் மதுக்கரை ஒன்றியக்குழு சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தெற்கு நகரக்குழு செயலாளர் நாகேந்திரன் தலைமை தாங்கினார். மதுக்கரை ஒன்றியக்குழு செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், ஏ.லாசர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், என்.அமிர்தம், ஆர்.பத்ரி, சி.பத்மநாபன், எம்.கண்ணன், ஏ.ராதிகா மற்றும் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

இதைத்தொடர்ந்து கோவை மாநகரப் பகுதியில் செவ்வாயன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சூலூர் தாலுகாவிற்குட்பட்ட இருகூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். சிங்கை நகரக்குழுவிற்குட்பட்ட ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு சிங்கை நகரக்குழு செயலாளர் வி.தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். பீளமேடு கமிட்டிக்குட்பட்ட பீளமேடுபுதூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகரக்குழு உறுப்பினர் மேகநாதன் தலைமை தாங்கினார்.  இதேபோல், கிழக்கு நகரக்குழுவிற்குட்பட்ட காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இயக்கத்திற்கு கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.ஜாகீர் தலைமை தாங்கினார். கோவை பேரூர்நகரக்குழு மற்றும் தொண்டாமுத்தூர் ஒன்றிய குழுசார்பில் வடவள்ளி பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்துக்கு தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார்.

முன்னதாக, இந்த பிரச்சார பயணக்குழுவினருக்கு அனைத்து இடங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்த பிரச்சார இயக்கங்களில் பங்கேற்ற தலைவர்கள் பேசுகையில், இந்திய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிசாரை விரட்டியடித்தது இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டம். இதேபோல் தற்போது அனுபவித்து வருகிற ஒவ்வொரு உரிமைகளுக்கு பின்னாலும் பல்வேறு போராட்ட தியாகங்கள் இருக்கின்றன. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நடத்தியபோராட்டமும், உயிர் தியாகமும்தான் இன்று அரசை பணிய வைத்திருக்கிறது. விளைவித்த பொருளுக்கு உரிய விலை வேண்டும். தண்ணீர் வேண்டும் என்ற விவசாயிகள் போராட்டம், கல்வியை வியாபாரமாக்காதே என்ற மாணவர்கள் போராட்டம், உழைத்ததற்கு உரிய கூலியை கொடு என அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், மருத்துவர்கள் துவங்கி முறைசார தொழிலாளர்கள் வரை உரிமைகளுக்காக தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவினர் மற்றும் அரசியலுக்கு வரப்போவதாய் சொல்கிற ரஜினிகாந்த் போன்றவர்கள் போராடுவது தேசவிரோத செயல்போல சித்தரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெறுமனே அதிகாரத்தின் பலனை அனுபவிப்பதற்கு மட்டுமான அரசியல்வாதிகளாக இவர்கள் வலம் வருகிறார்கள். ஆனால் அநீதியை கண்டு கொதித்தெழுந்து வெகுமக்களை திரட்டி உரிமைகளை பெறுவதற்கான போராட்டத்தை நடத்துவதுதான் அரசியல் கட்சியின் பணி, அரசியல் செயல்பாட்டாளனின் பங்காக இருக்க முடியும். இதுவரை நாம் பெற்றிருக்கிற உரிமைகள் அனைத்தும் போராடிப் பெற்றதே. ஆகவே இருக்கிற உரிமைகளை பாதுகாக்கவும், இழந்துவிட்ட உரிமைகளை மீட்கவும் போராடுவோம் தமிழகமே என்கிற அறைகூவலோடு மார்க்சிஸ்ட் கட்சி இந்த பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்த முழக்கத்தை முன்வைக்கிற தார்மீக உரிமை கம்யூனிஸ்டுகளுக்கே உள்ளது என்கிற அக்கறையோடு மார்க்சிஸ்ட் கட்சி போராடுவோம் தமிழகமே என்கிற அறைகூவலை முன்வைக்கிறோம் என பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். முன்னதாக, இப்பிரச்சார பயணத்தின் ஒருபகுதியாக திருப்பூர் கலைக்குழுவின் சார்பில் பாமர மக்களிடம் கருத்துக்களை எளிதாக கொண்டு செல்லும் வகையில் பாடல், நாடகம், தப்பாட்டம் ஆகிய வடிவங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் இதுவரையிலான அனைத்து உரிமைகளும் போராடியே பெற்றுள்ளோம். இழந்து விட்ட உரிமைகளை மீட்கவும், மாநில உரிமையை மீட்டெடுக்கவும், கோரிக்கைகளை வென்றெடுக்க தமிழகமே போராடுவோம் என்கிற வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.