கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்கேரியில் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் சுரேஷ் குடும்பத் திற்கு கட்சியின் சார்பில் ரூ. 2.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

2009ம் ஆண்டு கல்கேரியில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் சிபிஎம் கிளைச் செயலாளர் சுரேஷ். இதனால் சாதி ஆதிக்க சக்திகள் அவர்மீது கடும் கோபத்துடன் இருந்தனர்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் 19ந்தேதி அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததால் பின்னர் முருகேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் சுரேஷ் கொலையில் இன்னும் சிலர் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் சாமுவேல்ராஜ், துணைச் செயலாளர் ஆனந்தன், மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் சுரேஷ் குடும்பத்தை அனைத்து வகையிலும் கட்சி பாதுகாக்கும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், “போராடுவோம் தமிழகமே” முழக்கத்துடன் தமிழகம் முழு வதும் நடைபெற்றுவரும் சிபிஎம் பிரச்சாரக்குழு தேன்கனிக்கோட்டை வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் சுரேஷ் குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூ. 2.5 லட்சத்தை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், ஆனந்தன், சுகந்தி, எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.