சிங்கப்பூர், ஜுன் 11
உலகின் கண்களை கவர்ந்த கிம் ஜோங் உன் – டொனால்ட் டிரம்ப் சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடைபெற்றது.
வடகொரியாவுக்கும், அமெரிக்கா வுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்துள்ளனர். ஒட்டுமொத்த உலகின் கண்களும் சிங்கப்பூரை நோக்கி குவிந்துள்ளன.கிம் – டின்னம் இடையே நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் அது கொரிய தீபகற்பத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கும், மாற்றங்களுக்கும் வித்திடும் என மக்கள் சீனம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அடிப்படையான முன் முயற்சிகளை மேற்கொண்ட மக்கள்சீன அரசு, பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்துள்ளது.
அணு ஆயுத பரவல் தடைக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இந்தப்பேச்சுவார்த்தை அமையும் என்றும், இப் பேச்சுவார்த்தையை எந்தவிதத்திலும் பின்னடைய செய்துவிடாமல் நடத்தியே தீர வேண்டும் என்பதில் மிகவும் ஒத்துழைப்பான, சாதகமான முன்மொழிவுகளை தந்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கு மக்கள்சீனம் பாராட்டும் தெரிவித்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் நிலவுகிற ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் அரசியல் ரீதியாக தீர்வினை ஏற்படுத்த, அந்த தீர்வு ஒரு சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்லப்பட சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நிச்சயம் உதவும் என்று நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சுன் யிங், பெய்ஜிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அணு ஆயுதங்களின் பிடியிலிருந்து கொரிய தீபகற்பத்தை விடுவித்து அமைதியை நிலைநாட்ட ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாக இது அமையவேண்டும் எனவும் அவர் கூறினார்.கிம் – டிரம்ப் வருகையையொட்டி சிங்கப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.வடகொரிய தலைநகர் பியாங் யாங்கிலிருந்து சிங்கப்பூர் 4700 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பியாங்யாங்கிலிருந்து ஞாயிறன்று காலை புறப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம், முற்பகலில் சிங்கப்பூர் வந்தடைந்தார். முதலில் அவர்வடகொரியாவின் ஏர் கொரியா விமானத்தில் வருவதாக இருந்தது. எனினும் திடீரென விமானம் மாற்றப்பட்டது. ஏர்சைனா விமானத்தில் அவர் புறப்பட்டார். பியாங்யாங்கிலிருந்து பெய்ஜிங் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார். சிங்கப்பூரில் உள்ள செயிண்ட் ரெஜிஸ்ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படை யினரும், உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள பத்திரிகையாளர்களும் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை திட்டமிட்டது போல் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திந்து சுமார் 48 நிமிடங்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இருதலைவர்களும் முதலில் தனியாக நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கினர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக ‘போஸ்’ கொடுத்தனர். உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிக்கை, ஊடகவியலாளர்களின் காமிரா இந்த காட்சியை படம் பிடித்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.

இந்த நிலையில், கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  நானும், கிம் ஜோங் உன்னும் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண்போம். அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் தற்போது கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பழைய சம்பவங்களை மறக்க முடிவு செய்துள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில்  ஒளிபரப்பு

வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் உள்ள ரயில் நிலையத்தில், பிரம்மாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த வரலாற்று தருணத்தை வடகொரிய மக்கள் ஆர்வத்துடன் உற்று நோக்கினர்.

ட்ரம்ப், கிம் தங்கியுள்ள ஹோட்டல்கள், அவர்கள் சந்தித்துப் பேசும் ஹோட்டல் உட்பட சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக நன்மை கருதி இரு தலைவர்களின் சந்திப்புக்காக ரூ.135 கோடி செலவிடப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.