கோவை,
கோவை உக்கடம் மேம்பால விவகாரம் தொடர்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஒப்பணக்கார வீதி முதல் ஆத்துப்பாலம் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் அப்துல்ரகுமான், அதியமான், ராமகிருட்டிணன், அப்துல்காதர் உள்ளிட்டோர் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

உக்கடம் – ஆத்துப்பாலம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் வடிவத்தில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பில்லை. மேலும், மண்பரிசோதனையில் பாலம் கட்டுவதற்கு சாதகமான முடிவுகள் வரவில்லை என கூறப்படுகிறது. ஆகவே மக்களுக்கு பயன்படாத வகையில் ஏற்கனவே காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தைப் போல் இந்த பாலமும் ஆகிவிடும்.இதேபோல், பாலத்தின் திட்டம் குறித்த வெளிப்படையான விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. பாலம் கட்டுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனம் குறித்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேநேரம், சுமார் 120 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாலத்திற்காக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இதனை கண்டித்து கூட்டியக்கம் சார்பில் முதற்கட்டமாக வரும் ஜூன் 18 ஆம் தேதி, உக்கடம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும், பாலம் கட்டுவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அங்கு வசிக்கும் மக்களுக்கு அந்த பகுதியிலேயே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கூட்டியகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: