கோவை,
அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுத்த நிறுத்த வேண்டும். மாசிலாமணி கமிட்டியின் அறிக்கையின்படி தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். 25 சதவிகித இடஒதுக்கீட்டில் சேர்ந்து பயிலும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் தனியார்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடவேண்டும். அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதன் ஒருபகுதியாக கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ்ராஜா தலைமையில் மாணவர்கள் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கேப்டன் பிரபாகாரன், மாவட்ட துணைத் தலைவர் காவியா, சஞ்சய் பிரதாப், கோகுல் உட்பட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மாணவர்களின் இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

நாமக்கல்:
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணை தலைவர்கள் தேன்மொழி, காயத்திரி,சக்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: