திருவாரூர்:
தமிழகத்தில் அரசின் கல்விக்கொள்கை என்பது ஆட்சிகள் மாறினாலும் தனியார் கல்வி நிலையங்களுக்கு ஆதரவாகவே உள்ளது. தற்போதைய ஆட்சியிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளை மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இவற்றை கண்டும்காணாமல் உள்ள அரசின் கொள்கை அரசுப் பள்ளிகளை ஒழித்துவிட்டு தனியார் கல்வி நிறுவனங்களை வளர்க்கும் நிலையிலேயே உள்ளது என இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவர் வீ.மாரியப்பன் குற்றம்சாட்டினார்.

திருவாரூரில் செவ்வாய்கிழமையன்று (ஜூன் 12) தனியார் கல்வி நிலையங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது:
சிங்காரவேலர் கமிட்டி பரிந்துரைத்த கல்விக் கட்டணங்களை எந்த தனியார் கல்வி நிறுவனங்களும் கடைபிடிப்பதில்லை. மூன்றாண்டுக்கு ஒருமுறை தனியார் கல்வி நிலையங்களை ஆய்வு செய்து கட்டணங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டிய மாசிலாமணி கமிட்டியும் அந்த பணியை செய்வதில்லை இவை அனைத்தையும் அரசு அறிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இது தனியார் கல்வி நிலையங்களை அரசே பாதுகாக்கிறதோ என்ற ஐய்யப்பாட்டினை ஏற்படுத்துகிறது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள்ளாக சிங்காரவேலர் கமிட்டி பரிந்துரைத்த கட்டண விகிதங்கள் வசூலிக்கப்படுகிறதா என்று அரசு ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அதுநடைபெறவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் கூட அரசு உதவிபெறும் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் மழலையர்களை சேர்ப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் தொடங்கி முடிந்தவரை வசூலிக்கப்படுகிறது. சட்ட விரோத கட்டணம் என்பதால் உரிய ரசீதுகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தருவதில்லை. அதேபோல 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ்கள் (டிசி) வழங்குவதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது. ஆனால் அரசுப் பள்ளிகளிலேயே 1500 ரூபாய் வரை வசூலிப்பதாக தெரியவருகிறது. பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் மாணவர்களிடம் பணத்தை வசூலித்து அதன் தலைவர்களே வைத்துக் கொள்ளும் போக்கும் உள்ளது.

256 பள்ளிகள் மூடல்
தமிழ்நாடு அரசு கல்வி நிலையங்களை வருமானமற்ற பிரிவாக கருதி சேவை மனப்பான்மையற்ற நிலையில் சுமார் 256 அரசு பள்ளிகளை மாணவர் வருகை குறைவு என்று காரணம்காட்டி மூடியுள்ளது. அரசின் கொள்கை காரணமாகவே அரசுப்பள்ளிகள் நலிவடைந்து வருகிறது. 25 சதவீதம் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்ற நிலையில் தனியார் பள்ளிகள் அரசிடமிருந்து பணம் வந்தபிறகு உங்களிடம் திருப்பி தந்துவிடுகிறோம் என சொல்லி கட்டணம் வசூலிக்கின்றனர். இது தண்டடைக்குரிய குற்றமாகும். மத்திய அரசு நித ஒதுக்கவில்லை என கூறி மாநிலஅரசும் கல்வி உதவித்தொகையினை முறையாக வழங்குவதில்லை.

சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து நீட் தேர்விற்கு நிறைவேற்றிய இரண்டு தீர்மானங்கள் குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. இதில் அரசின் செயல்படாத தன்மையின் காரணமாகவே தமிழகத்திற்கும் சற்றும் பொருந்தாத சமூக நீதிக்கொள்கைக்கு எதிரான நீட்தேர்வினை குறைந்த கால அவகாசத்தில் தமிழக மாணவர்களிடம் திணித்ததன் விளைவாக 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட நீட்தேர்வில் தோல்வியை தழுவினார்கள். மொழியாக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் ஏராளமான குளறுபடிகள் இருந்தும் அதற்கான கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. இதற்காக நீதிமன்றத்தில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில் செயல்படும் அரசுகளுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் இந்த போராட்டத்தை நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

காவல்துறை அடக்குமுறை
தொடர்ந்து திருவாரூர் விளமல் கல்பாலத்திலிருந்து ஊர்வலமாக மாவட்ட செயலாளர் ஆ.பிரகாஷ் தலைமையில் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மைகல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுவதற்காக புறப்பட்டனர். போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சத்தியசீலன், ஆனந்த், கவிதா, சிவனேஸ்வரி, கிளைட்வ், ஒன்றிய செயலாளர் மதன், நகர செயலாளர் சுர்ஜித் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். மாணவர்கள் கூடியிருந்த பகுதியில் அவர்களை சுற்றி போலீஸ் வாகனங்களை நிறுத்திக்கொண்டும் அவர்களை சுற்றி காவல்துறை அதிகாரிகள் நின்றுகொண்டும் ஆண் பெண் காவலர்கள் கயிற்றை கொண்டு வளையம் அமைத்தும் நின்ற இடத்திலிருந்து அசையவிடாமல் அடக்குமுறையில் ஈடுபட்டனர். கோரிக்கை முழக்கம் துவங்கியவுடன் அப்படியே மாணவர்களை தள்ளி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.